ஆடை அணிகலன்கள்

5783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
5784. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், 'யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்' என்று கூறினார்கள்.4
5785. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது சூரியம்ரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அவரசத்துடன் எழுந்து தம் ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். (பள்ளிவாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் சூரியம்ரகணம் விலகும்வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி(ஸல்) எங்களை நோக்கி, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றில் (ம்ரகணங்களில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அதை அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.5
5786. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
பிலால்(ரலி) (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டு வந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு 'இகாமத்' சொல்வதை கண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு (தம் அறையிலிருந்து) வெளியே வந்ததை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி(ஸல்) அவர்களுக்கு முன் நடந்து செல்வதை பார்த்தேன்.6
5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்).
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
5788. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். 7
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
5789. நபி(ஸல்) அவர்கள்' அல்லது 'அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
5790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(முற்காலத்தில்) ஒருவர் தம் கீழங்கியை (தற்பெருமையுடன் தரையில்) இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவரை பூமியில் புதைந்து போகும் படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தம் உடல்) குலுங்கியபடி மறுமை நாள் வரை பூமியினுள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பார்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.8
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜரீர் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்
நான் சாலீம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்களுடன் அவர்களின் வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் மேற்சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியேற்றேன்' என்றார்கள்.
5791. ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அறிவித்தார்
நான் முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்று கொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பளிக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்.
'தற்பெருமையின் காரணத்தால் தம் ஆடையை(த் தரையில்படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறவரை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) சொல்லக் கேட்டேன். அப்போது நான் முஹாரிப்(ரஹ்) அவர்களிடம், 'தம் கீழங்கியை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் அறிவிப்பில் கூறினார்களா?' என்று வினவினே. அதற்க அவர்கள், 'கீழங்கி' என்றோ, '(முழு நீளச்) சட்டை' என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்கள்.
இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5792. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), இருக்க நான் (அங்கு) அமர்ந்திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் வந்தார். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அவர்களை மணமுடித்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், இறைத்தூதர் அவர்களே!' என்று சொல்லிவிட்டுத் தம் முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.
காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) இச்சொல்லை வாசலில் நின்ற படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத்(ரலி) உள்ளே வர அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், 'அபூ பக்ரே! இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பம்ரங்கமாக இப்படிப் பேசக்கூடாது என்று நீங்கள் தடுக்கக்கூடாதா?' என்று (வெளியிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை. அப்பெண்ணிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது' என்று கூறினார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகிவிட்டது. 10
5793. அலீ(ரலி) அறிவித்தார்
...பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேல் துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்தார்கள். பிறகு நானும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் பின்தொடர, நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா(ரலி) இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களுக்கு இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். 12
5794. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?' என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்குமபடி அணிந்து கொள்ளட்டும்' என்று பதிலளித்தார்கள். 13
5795. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்ட பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெளியே எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் வெளியே எடுக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களின் முழங்கால்களின் மீது வைக்கப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உமிழ் நீரை அவரின் மீது உமிழ்ந்து தம் (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ் அறிவான். 14
5796. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டபோது அவரின் புதல்வர் (அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரலி)) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே தங்களின் (முழு நீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குக் 'கஃபன்' (பிரேத ஆடை) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் தம் (முழுநீளச்) சட்டையை வழங்கி (அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை முடித்தவுடன் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார்.
உடனே நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து 'நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்று தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி, அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான்' என அல்லாஹ் கூறினான் என்று கூறினார்கள். உடனே 'நயவஞ்சகர்களில் இறந்துவிட்டவர் எவருக்காகவும் ஒருபோதும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவர்களின் மண்ணறையருகே நிற்கவும் வேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) இறைவசனம் அருளப் பெற்றது. இதையடுத்து நயவஞ்சகர்களுக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துவதை நபியவர்கள் கைவிட்டார்கள்.15
5797. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்பேகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதத் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:
(இதைக் கூறியபோது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் விரலால் தம் சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக் காட்டினார்கள். மேலும், 'அவன் தன்னுடைய நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படைவாய்; ஏனெனில்) அது விரியாது' என்றும் கூறினார்கள். 16
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
மற்றுமோர் அறிவிப்பில் ('இரண்டு நீளங்கிகள்' என்பதற்கு பதிலாக) 'இரண்டு கவசங்கள்' என வந்துள்ளது.
5798. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர்கொண்டேன். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள்.
அப்போது அவர்கள் வாய்கொப்பளித்து நாசிக்குத் தண்ணீர் செலுத்திவிட்டுத் தம் முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரண்டு கைகளையும் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. எனவே, தம் இருகைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவிக் கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் 'மஸ்ஹ்' செய்து) தடவினார்கள். ('மோஸா' எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவினார்கள்.17
5799. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்
நான் ஒரு பயணத்தின் ஓரிரவு நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், 'உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறது)' என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்களின் மீது ஊற்றினேன். அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், 'அவற்றைவிட்டுவிடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன்' என்று சொல்லி, (ஈரக்கையால் அவற்றைத்) தடவி (மஸஹ் செய்து) கொண்டார்கள்.18
5800. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('கபா' எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா(ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே, மக்ரமா(ரலி) (என்னிடம்), 'அன்பு மகனே! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் செல்' என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) 'நீ உள்ளே போய் நபி(ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா' என்று கூறினார்கள். நான் அவ்வாறே மக்ரமா(ரலி) அவர்களிடம் வரும்படி நபி(ஸல்) அவர்கள் மக்ரமா(ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் 'உங்களுக்காக இதை எடுத்து வைத்தேன்' என்று கூறினார்கள். மக்ரமா(ரலி) அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, 'மக்ரமா திருப்தி அடைந்துவிட்டான்' என்று கூறினார்கள். 19
5801. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ('ஃபர்ரூஜ்' எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்தார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, 'இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று' எனக் கூறினார்கள். 20
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5802. சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்
அனஸ்(ரலி) மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பளி கலந்தபட்டால் ஆனதாக இருந்தது.
0 Responses

கருத்துரையிடுக