மீலாது விழா

அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?

வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது.

தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட,  நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா? நம்மை விடப் பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?

நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும், எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவை கொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.

தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும் சொல்லியிருப்பார்கள்.

மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.

வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அதிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.

0 Responses

கருத்துரையிடுக