குடிபானங்கள்


5575. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.2
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
5576. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப் போயிருக்கும்' என்று கூறினார்கள்.3
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5577. அனஸ்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.4
5578. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (அது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்யாளனாக இருந்தபடி திருட மாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
அப்துல் மலிக் இப்னு அபீ பக்ர்(ரஹ்) இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) தமக்கு அறிவித்து வந்ததாகக் கூறினார்கள். மேலும், அப்துல் மலிக்(ரஹ்) '(என் தந்தை) அபூ பக்ர்(ரஹ்) இந்த (ஹதீஸில் இடம் பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), '(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளைடியப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்க மாட்டான்' என்பதையும் (நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்' என்று கூறினார்கள்.
5579. இப்னு உமர்(ரலி) கூறினார்
(திராட்சையினால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடைசெய்யப்பட்டது.7
இதை நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
5580. அனஸ்(ரலி) கூறினார்
மது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. அது தடை செய்யப்பட்டபோது மதீனாவில் திராட்சையினால் தயாரிக்கப்படும் மது சிறிதளவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. எங்கள் மதுபானங்களில் பெரும்பலானவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் ஆனவையாகும்.
5581. இப்னு உமர்(ரலி) கூறினார்
(என் தந்தை) உமர்(ரலி) சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பின்) 'ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்' என்று கூறினார்கள்.8
5582. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
அபூ உபைதா(ரலி), அபூ தல்ஹா(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, 'மது தடை செய்யப்பட்டுவிட்டது' என்று கூறினார். உடனே அபூ தல்ஹா(ரலி), 'எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.9
5583. அனஸ்(ரலி) கூறினார்
நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றின் கொண்டிருந்தன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது 'மது தடை செய்யப்பட்டுவிட்டது' என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்) 'அதைக் கவிழ்த்து (கொட்டி) விடு' என்று கூறினார்கள். அவ்வாறே நான் கவிழ்த்து(க் கொட்டி)விட்டேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:
நான் அனஸ்(ரலி) அவர்களிடம் 'அவர்களின் மது எத்தயைது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பேரீச்ச செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), '(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.
என் தோழர்களில் ஒருவர் கூறுகிறார்: அனஸ்(ரலி) 'அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
5584. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான் மதுபானமாகும். என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது.
5585. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்று பதிலளித்தார்கள்.
5586. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்' என்று கூறினார்கள்.
5587. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்' என்று சொன்னதாக அனஸ்(ரலி) எனக்கு அறிவித்தார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) இவ்விரண்டுடன் மண் சாடியையும் பேரீச்சம் மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப் பானையையும் சேர்த்து அறிவித்துவந்தார்கள்.
5588. இப்னு உமர்(ரலி) கூறினார்
(என் தந்தை) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்.
மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் தரையிடக் கூடியதாகும்.12 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு:
1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?13
2. 'கலாலா' என்றால் என்ன? 14
3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம் 15
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹய்யான் அத்தைமீ(ரஹ்) கூறினார்:
நான் ஆமிர் இப்னு ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், 'அபூ அம்ரே! சிந்து சமவெளியில் அரிசியினால் தயாரிக்கப்படும் ஒரு வகை (மது)பானம் உள்ளதே? (அதன் சட்டம் என்ன?)' என்று கேட்டேன். அவர்கள், 'அது 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில்' அல்லது உமர்(ரலி) அவர்களின் காலத்தில் இருந்ததில்லை' என்று பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) 'திராட்சை' என்பதற்கு பதிலாக 'உலர்ந்த திராட்சை' என்று வந்துள்ளது.
5589. உமர்(ரலி) கூறினார்
மது ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அவை: 1. உலர்ந்த திராட்சை 2. பேரீச்சம் பழம் 3. கோதுமை 4. வாற்கோதுமை, 5. தேன்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்
'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
5591. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணாயிருந்த அவர்களின் துணைவியாரே நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.
அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் தெரியுமா?
அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். (மணவிருந்து உண்ட பின் நபியவர்களுக்கு அந்தப் பழச்சாற்றை அவர் புகட்டினார்.)
5592. ஜாபிர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் 'அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்)' என்று சொல்லிவிட்டார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்கள் (சில வகைப்) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று தடை விதித்த போது..' என்று வந்துள்ளது.
5593. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே' என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.
5594. அலீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
...இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
0 Responses

கருத்துரையிடுக