கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன.
அரசும் ஓரளவு ஒதுக்கிக்கொடுத்தாலும் அது போதாது என்று உண்மையிலும் பெயரளவிலும் கூட இயக்கங்கள் போராடி வருகின்றன. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் அவர்களுக்கான இயக்கங்களும் கூடவே போராடி வருகின்றன. இதைப்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.
முதலாவதாக இட ஒதுக்கீடு என்பது என்ன? அது ஏன் அவசியம்?
இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்து எழுச்சி பெறக்காரணமே இந்திய சமூக வாழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலவி வந்த ஒருவகை இன ஒதுக்கீடுதான். அதாவது, இட ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பி, போராடுவதற்கு காரணம் இன ஒதுக்கீடாகும்.
இந்தியாவில் ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும், வர்ணாசிரமகொள்கைகளும் மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை ஒதுக்கீடு செய்தன. செய்யவேண்டிய தொழில்களை இவைகள் இனவாரியாக ஒதுக்கீடு செய்தன. தலையில் தோன்றியவன், வயிற்றில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்று பிறப்பில் இன ஒதுக்கீடு செய்தன.
தலையில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டவன் தரணி ஆளவும், காலில் தோன்றியவன் என்று கற்பிக்கப்பட்டவன் கக்கூஸ் அள்ளவும்தான் என்று கடவுளின் பெயராலேயே தொழில்களை இனங்களுக்கிடையில் ஒதுக்கீடு செய்தன.
ஒரே இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் ஆண்டான் அடிமை வர்க்க பேதம் கற்பிக்கப்பட்டு அதை மக்களும் ஏற்றுக்கொண்டு கைபொத்தி, மெய்பொத்தி, தலை ஆட்டி வாழ்ந்து வந்த காரணத்தால் இனி இது பொறுப்பதற்கில்லை என்ற உணர்வு பெற்றவர்கள் சமூக நீதி வேண்டும் என்று போராடியதன் காரணமாக ஆங்கில ஆட்சியிலேதான் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வழங்கப்பட தொடங்கப்பட்டது.
ஆகவே ஆட்டிப்படைத்த ஆரிய மனுநீதி என்ற நஞ்சானது, மனிதனின் பிறப்பிலேயே கற்பித்த பேதம் என்கிற இன ஒதுக்கீடுதான் பேதங்களை மாற்றி சமூக நீதி வழங்குவதற்கும் ஓர் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் எழ காரணமானது.
மிக சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட- உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் கால்மேல் கால்போட்டு அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது – இதுவரை மேடாக இருந்ததை சமமாக்க வேண்டுமானால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டாகவேண்டும் என்ற அடிப்படைதான் இட ஒதுக்கீடு.
கூனிக்குறுகி நின்றவனை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏணியில் ஏற்றி விடுவதுதான் இட ஒதுக்கீடு. ஆனாலும் சமூக நீதிக்கு தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக விரோத மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!
அரபு நாடுகளின் பொருளாதார செழுமைக்குக் காரணம் எண்ணை வளம்; தென் ஆபிரிக்காவின் செழுமைக்குக் காரணம் தங்க வளம்; மலேசியாவின் செழுமைக்குக் காரணம் மண்ணின் வளம்; ஜப்பானின் செழுமைக்குக் காரணம் மனித மூளை வளம். ஐரோப்பிய நாடுகளின் செழுமைக்குக் காரணம் உலகைச் சுரண்டிய வளம்; ஆனால் இந்தியா, சீன நாட்டில் இருப்பதோ மனித வளம் மட்டுமே. இருக்கும் மனித வளத்தை பயன்பட வைத்து சீனா இன்று பொருளாதாரத்தில் கொடி கட்டி பறக்கிறது.
சீனாவுக்கு அடுத்த மனிதவளத்தை பெற்றிருக்கும் இந்தியா ஏன் பின்தங்கி இருக்கிறது? ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தங்கங்களை வாங்கி குவிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இருக்கும் இந்தியாவின் பெயரை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் கண்ணில் விளக்கெண்ணெ ஊற்றித் தேடவேண்டி இருக்கிறது. காரணம் சீனா தனது மனிதவளத்தின் 89% சதவீதத்தை உற்பத்திக்கு (PRODUCTIVITY) பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மனிதவளம் வெறும் 22% தான். காரணம் எண்ணிக்கையில்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், மனிதவளத்தின் தரத்தில் எட்டாத தூரத்தில் இருக்கிறோம். QUANTITY மட்டும்தான் இருக்கிறது QUALITY இல்லை.
இப்படி தரமற்ற மனிதவளம் உருவாகிடக் காரணம் ஆரியர்கள்தான். அவர்களின் வர்ணாசிரமக் கொள்கைகள்தான். குறைந்த அளவு உள்ள ஒரு சமுதாயம் இருக்கும் வளங்களை எல்லாம் சுரண்டிக்கொண்டு அதிக அளவு இருந்த சமூகங்களை மேலே எழவிடாமல் தலையில் தட்டி அடக்கிவைத்ததுதான் காரணம்.
கல்வியை ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் கற்கவேண்டுமென்று கடவுளின் பெயரால் போதித்தார்கள். அரசராகவும், அமைச்சராகவும், ஆளும் வர்க்கமாகவும் ஆரியர்கள்தான் வரவேண்டுமென்று ஆண்டவன் கூறியிருப்பதாகப் புராணங்களை அவிழ்த்துவிட்டார்கள். அரியணைகளில் ஏறும் தகுதி அவர்களுக்கு மட்டுமே என்று ஆர்ப்பரித்தார்கள். ஆளும் பிரதிநிதிகளாகவும், ஆளுனர்களாகவும் அங்கவஸ்திரம் தரித்த துபாஷ்களாகவும், திவான்களாகவும் அவர்களுக்குள் அமர்த்திக்கொண்டார்கள். பல்லக்கில் அமரும் பவிசு தங்களுக்கே என்று பறித்துக்கொண்டார்கள்.
அரண்மனை சேவகர்கள், வீட்டு வேலைக்காரர்கள், துண்டு துணி துவைப்பவர்கள், கூட்டுபவர்கள், பெருக்குபவர்கள், மலம் அள்ளுபவர்கள், போர்வீரர்கள், விவசாயிகள் , பல்லக்கு தூக்கிகள் என்ற வேலைகளுக்கு பரமன் பாதத்திலே பிறந்த வர்க்கம் என்ற சூத்திரனை உருவாக்கி அடக்கி அறிவை பெருக்கவிடாமல் வைத்து இருந்ததால் மனிதவளத்தில் தரமற்ற நிலை ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் நிகழக்காரணமாயிற்று. அந்த விளைவுகளின் தொடர்ச்சிதான் இன்றுவரை இந்திய மனிதவளம் சீனாவோடு ஒப்பிடுகையில் தரமற்று இருப்பதற்கு காரணம்.
ஆனால் இன்றும் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எதிப்புக்குரல் எழுகிறது. ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது, நாம் கேட்பது, அரசால் தர முடிவது 12% தொழில், பதவிகளிலிருந்து மட்டுமே. காரணம் ஏற்கனவே 88% தொழில்கள், பதவிகள் தனியார்களுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. அரசிடம் இட ஒதுக்கீட்டுக்காக தர முடிவது இந்த வெறும் 12 சதவீதத்திலிருந்துதான். எல்லோரையும் திருப்தி படுத்தியாக வேண்டும்.
இந்த குறைந்த சதவீதத்தைக்கூட தரவிடாமல் ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடுக்கு எதிராக திரளுகின்றன. ஆகவேதான் தனியார் துறைகளிலும் அரசின் அளவுகோள்படி இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
Source :அதிரை-நிருபர்-குழு
--
Ashraf
‹(•_•)›
kuwait
Ashraf
‹(•_•)›
kuwait
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait
__._,_.___
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.
__,_._,___
கருத்துரையிடுக