டிஜிட்டல் அப்பாவிகளின் அந்தரங்கம்! (தினமணி கட்டுரை)
புளியங்குடி பூலியன்
இணையத்தில் உலவுகிறீர்களா? அப்படியெனில் உங்களது பெயர், வயது, பாலினம், வேலை செய்யும் இடம், பிடித்தது, பிடிக்காதது போன்ற சுய விவரங்கள் அடங்கிய அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வருகிறீர்கள் என்றுதான் பொருள். இணையத்தை போகிற போக்கில் மேயும், அதிலேயே பல மணிநேரங்களைச் செலவிடும், அங்கேயே குடியிருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுதான் கதி.
இணையத்தில் யாரும் மறைந்து வாழ முடியாது. எதையாவது செய்துவிட்டு, அது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று நினைப்பது மாபெரும் அறியாமை. அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒவ்வோர் அசைவும் பதிவு செய்யப்படுகிறது. இப்படி நம்மைக் கண்காணிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது, நம்மைப் பின்தொடர்ந்து நாட்டின் ராணுவ ரகசியங்களையா தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா, அப்படியானால், நீங்கள்தான் அப்பாவி நம்பர் 1.
பணம் கொடுக்காமல் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது பயன்படுத்தினால், அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்பது பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருக்கும் அருமையான வாசகம். நடைமுறை வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கையில் மக்கள் அல்லல்பட்டு வரும் இந்த நிலையில் இந்த வாசகம் மிகப் பொருத்தம்.
இதுவரை இணையச் சேவையில் எதையாவது பணம் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களா, மின்னஞ்சல் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கட்டணம் செலுத்தியிருக்கிறீர்களா எனக் கேட்டால், இணையத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் பதில் "ஊகூம்' என்பதாகத்தான் இருக்கும். சினிமா டிக்கெட், சென்ட் பாட்டில், கூலிங் கிளாஸ் போன்றவற்றை வேண்டுமானால் இணையத்தின் மூலம் வாங்கியிருக்கலாம். ஆனால், மின்னஞ்சல், சமூக வலைத் தளம், சாட்டிங்? ஊகூம்தான்.
வாடிப்பட்டி என்று டைப் செய்தவுடனேயே, அந்த ஊர், எந்த நாட்டில், எந்த மாநிலத்தில் இருக்கிறது, நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலிருந்து அந்த ஊருக்கு எவ்வளவு தொலைவு, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அந்த ஊரின் தலைவர் யார், மக்கள் தொகை எவ்வளவு என்பன உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் பெற்றுவிட முடிகிறது.
அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு நபரின் வீடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுபிடித்துவிட முடியும். இதற்கெல்லாம் எப்போதாவது பணம் கொடுத்திருக்கிறீர்களா? இதையெல்லாம் இவர்கள் நமக்கு ஏன் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்கிற கேள்வி எப்போதாவது உதித்திருக்கிறதா? இல்லையென்றால், நீங்கள் நம்பியிருக்கும் நிறுவனங்கள் இதுவரை உங்களைத்தான் விற்று வந்திருக்கின்றன.
இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.5 லட்சம் கோடி. கடந்த நிதியாண்டின் வருவாய் மட்டும் 20 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.
இலவசமாகச் சேவையளிக்கும் ஃபேஸ்புக்காரர்கள், எப்படி இவ்வளவு பணத்தைச் சம்பாதித்தார்கள்? மறைக்காமல் கூறுவதென்றால், நம்மை விற்றுத்தான். அதுசரி, நம்மை ஒரு பொருளாக விற்க முடியுமா என்ன? நிச்சயமாக முடியும்.
பணம் கொடுப்பவர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். சும்மா வந்து போகிறவர்களெல்லாம் வாடிக்கையாளர் அல்லர். பணம் தருவோரிடம் வேறு என்னென்ன பொருள்களையெல்லாம் விற்றுப் பணம் பெற முடியும் என்று நிறுவனங்கள் யோசிப்பது வழக்கம். பணம் தராமல் இலவச சேவைகளை மட்டுமே பயன்படுத்துபவரை என்ன செய்வது? அவர்களையே விற்றுவிட வேண்டியதுதான்.
அந்த வகையில், தங்களது சேவைகளைப் பயன்படுத்தும் அனைவரின் தகவல்களையும் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்களது தரவுத் தளத்தில் சேகரித்து வைக்கின்றன.
தகவல்கள் என்றால், அவர் அடிக்கடி என்னென்ன இணையதளங்களைப் பார்வையிடுகிறார், எந்த மாதிரியான தகவல்களை அனுப்புகிறார், எந்த நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்துகிறார் என்பதெல்லாம்தான். இவைதான் விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.
விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களுக்கான ஏஜென்சிகளைப் பொருத்தவரை இது மிகவும் மதிப்புமிக்க பொருள். அதனால், எத்தகைய பயனராக இருந்தாலும் அவரது சுயவிவரங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட விலை உண்டு.
இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடே இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்களது சேவைகளுக்காக "அந்தரங்கக் கொள்கை' என்கிற ஒன்றை வகுத்தளிக்க வேண்டியது கட்டாயம். பயனர்களின் தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது போன்ற விளக்கங்களை அவை கொண்டிருக்கும். ஆனால், இவையெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட கூகுள் ஒருபடி முன்னேறியிருக்கிறது. தேடுபொறி, மின்னஞ்சல், யூடியூப் என்கிற விடியோ சேவை, அனலிடிக்ஸ் என்னும் இணையதள புள்ளிவிவரங்களை அளிக்கும் சேவை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனியே இருந்த அந்தரங்கக் கொள்கைகளை, அண்மையில் பொதுவான ஒரே கொள்கையாக கூகுள் அறிவித்திருக்கிறது.
இதன்படி, ஒரு சேவையைப் பயன்படுத்துவோரின் அந்தரங்கத் தகவல்கள், பிற சேவையைப் பயன்படுத்தும்போது எதிரொலிக்கும். உதாரணத்துக்கு யூடியூப்பில் ஒரு விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், கூகுள் தேடலின்போது, அது சம்பந்தமான தகவல்கள் முதன்மைப்படுத்தப்படும் அல்லது விளம்பரமாக வெளியிடப்படும்.
"கூகுள் டாக்ஸ்' எனப்படும் ஆவணங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம், நாற்காட்டி, மின்னஞ்சல் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், பயனரின் அனைத்துத் தகவல்களையும் கூகுள் மிக எளிதாகச் சேமித்து வைத்துவிடுகிறது. கூகுள் "டாஸ்போர்டு' என்கிற பகுதியில் நாம் இதுவரை இணையத்தில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று பார்க்க முடியும். இதை அழிக்க முடியும் என்றாலும், அது எத்தனை பேருக்குத் தெரியும்?
கடைசியாக ஒன்று, எனது பேஸ்புக் சுவரில் யாரோ தேவையற்ற ஆபாசத் தகவல்களைப் பதிவிடுகிறார்கள் என்று இணையத்தில் உலவும் பலர் கதறுவதைக் கேட்டிருப்போம். அந்த "யாரோ' உருவாக வாய்ப்பளித்தது வேறு யாருமல்ல, சம்பந்தப்பட்ட அப்பாவியேதான்.
O ALLAH ! Guide us to the straight way!!
- Syedali SYED MASOOD
-----------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait
__._,_.___
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.
__,_._,___
கருத்துரையிடுக