[K-Tic] சுய தொழில்கள்15:டீசலோடு போட்டி போடும் புன்னை [1 Attachment]

 
[Attachment(s) from Mohammad Sultan included below]




ஏங்க! இந்த விவசாய நண்பர்கள் சொல்றத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க! உங்க ஊருலே இது சாத்தியப் படுமான்னுப் பாருங்க! வசதி வாய்ப்பு இருந்தா நீங்களுந்தான் இதைச் செய்யலாமே!
Engr.Sulthan
டீசலோடு போட்டி போடும் புன்னை



 

 

அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. 'இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை' என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், "புன்னை, கைவிடாது என்னை... !" என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புண்ணை எண்ணெய் புண்ணியத்துல !
ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான் !

இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. "என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?" என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம். குளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம். சடசடவென புன்னைக்கு 'வாழ்த்துமாரி' பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர் (அலைபேசி : 97510 02370).

சுனாமியில கூட சுழற்ற முடியல !
"டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 0,70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
"செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம். கொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம். அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை  எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.

கரும்புகை போகுது.. கமழும்  புகை வருது !
5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.
ஒரு லிட்டர்  டீசலோட விலை 35 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது. மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார்.

டீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.
"புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் " என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.
10ஹெச்பி.. 20 ஹெச்.பி..
புன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்கும் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி பேசும்போது, " டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும். புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை.
அதனால.. டீசல்ல ஓடுற வண்டிகளுக்கும் கண்டிப்பாக இதைப் பயன்படுத்த முடியும்ன்னு நம்புறேன். அரசாங்கமும் ஆய்வாளர்களும் தான் அதுக்கான முயற்சியைச் செய்யணும். இதுல நிச்சயம் வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை என்று உறுதியான குரலில் சொன்ன ராஜசேகர், புன்னை வளர்ப்புப் பற்றி பாடமெடுத்தார். அது.

புன்னை வளர்ப்பு !
எல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத் தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.
நிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும். அதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும். பிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.
அரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக்  கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம். இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு பெரிதாக எந்தப் பராமரிப்பும் இல்லை.
ஐந்தாம் ஆண்டில் ஆரம்பம் !
ஐந்தாம் ஆண்டில் பத்து அடி உயரத்துக்கு மரம் வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் காய்ப்பு ஆரம்பிக்கும். பொதுவாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை புன்னை மகசூல் கொடுக்கும். ஐந்தாம் ஆண்டு முதல் ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 4 கிலோ முதல் 20 கிலோ வரையிலான பருப்பு கிடைக்கும். 10 வருடங்களுக்குப் பிறகு 10 கிலோ முதல் 60 கிலோ.. 20 வருடங்களுக்கு பிறகு 50 கிலோ முதல் 150 கிலோ என்று உயர்ந்து கொண்டே போய், 25 வருடங்களுக்குப் பிறகு காய்ப்பின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும். 150 கிலோ முதல் 300 கிலோ வரை பருப்பு கிடைக்கும். அதிகபட்சமாக 500 கிலோ கிடைத்தாலும்  ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ஒரு மரத்துக்கே இந்தளவு மகசூல் என்றால், ஒரு விவசாயி, 10 புன்னை மரங்கள் வைத்திருந்தால், அவரின் தேவை பூர்த்தியாவதோடு, மீதியை விற்பனை செய்வதன் மூலமாக லாபமும் பார்க்கலாம். இதற்காக மிகவும் கஷ்டப்படத் தேவையில்லை. குறைந்த நீரில் சிறப்பாக வளரக்கூடிய புன்னை, வறட்சியையும் தாங்கி வளரும். பயோடீசலுக்கான மற்றப் பயிர்களைக் காட்டிலும் எளிதாக வளரக்கூடியது.. வளர்க்கக்கூடியது.
சாகுபடி பாடத்தை முடித்து நிறைவாகப் பேசிய ராஜசேகர், "முன்னயெல்லாம் தமிழ் நாட்டோட கடலோரத்துலயும் ஆத்தோரத்துலயும் நிறைய கிராமங்கள்ல புன்னை மரம் செழிப்பா வளர்ந்து நின்னதுங்க. இப்ப அதெல்லாம் மாயமாயிடுச்சி. அதோடப் பயன்பாடு தெரியாம, வெட்டி அழிச்சிட்டாங்க. இனிமேலயாவது  இதுல அரசாங்கம் கவனம் செலுத்தி, புன்னை மர வளர்ப்புல ஈடுபட்டா.. எதிர்க்கால எண்ணெய்த் தேவையை சமாளிக்கலாம். சுற்றுச்சூழலைக் கெடுக்காம.." என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.

உரமாகும் பிண்ணாக்கு
ஒரு கிலோ பருப்பை அரைப்பதன் மூலம் 300 கிராம் வரை பிண்ணாக்கு கிடைக்கும். இது வயலுக்கு நலல உரமாகப் பயன்படும். ஒரு லிட்டர் புன்னை எண்ணெயைத் தயாரிக்க 10 ரூபாய் தான் செலவு. நம் மோட்டார் தேவைக்குப் போக மீதியை லிட்டர் 42 ரூபாய்க்கு விற்கலாம்.  கோயில்களுக்காக இதை வாங்கிக் கொள்வார்கள்.
ஒரு கிலோ புன்னைப் பருப்பு 20 ரூபாய்க்கு விலைப் போகும். இதைச் சோப்பு தயாரிக்கப்பயன்படுத்துகிறார்கள். இதை வாங்கிச் செல்வதற்காக சோப்புக் கம்பெனி பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.

புன்னை இன்ஜினியர்
கண்டியன்காடு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, பன்னை எண்ணெயை இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்திருக்கும் ராஜசேகர், வெறும் விவசாயி மட்டுமல்ல.. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு, இந்திய விமானப் படையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, கொல்கத்தா, சண்டிகார், ஆதம்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இருக்கிறார். இதன் மூலட் ஏவுகணைத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கும் ராஜசேகர். " நிச்சயமா புன்னை எண்ணெய் மூலமா எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். இது நூத்துக்கு நூறு பலன் கொடுக்கும்கிறதுல எந்தச் சந்தேகமும் தேவையில்ல..." என்று அடித்துச் சொல்கிறார்.

கேலோபில்லம் இனோபில்லம் !
புன்னையின் தாவரவியல் பெயர் "கேலோபில்லம் இனோபில்லம் (Calophyllum inophyllum). தமிழ் இலக்கியங்களில் புன்னையின் பெருமை வெகுவாகப் பேசப்படுகிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகளான நெய்தல்  நிலத்தின் அடையாளமாகவே, புன்னை மரங்கள் திகழ்ந்திருக்கின்றன. கோயில்களில் புன்னை இலையில் தான் முன்பு பிரசாதம் வழங்கப்பட்டது.  மருத்துவ குணங்கள் இருப்பதால் புன்னை மரத்தடியில் நின்றாலே நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.
தேனீக்கள் மற்றும் பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது புன்னை. இம்மரத்தின் பூக்களைத் தேடி அதிக தேனீக்கள் வரும். இது தோட்டத்தில் அயல்மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற பெரிதும் உதவியாக இருக்கும். வெளவால்கள் அதிகமாக வருவதால், அவற்றின் எச்சம் உரமாகப் பயன்படும்.
புன்னை இலைகளை ஆடு, மாடு சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிச்சமும் தண்ணீரும்
ராஜசேகரின் ஐந்தரை ஏக்கர் தோட்டத்தில் தென்னை, முந்திரி, சூபாபுல், மா, வேம்பு, பலா, ஈட்டி, செஞ்சந்தனம், மகோகனி, பென்சில், சவுக்கு, எலுமிச்சை, வாழை, ஆலம், ஆரஞ்சி, நெல்லி, கொய்யா, நாவல், புளி தேக்கு, ஓதியன், இலந்தை என 36 வகையான மரங்கள் பெரிய கூட்டுக் குடும்பமாகவே இருக்கின்றன. இதில் முந்திரி, தென்னை, மா, வாழைதான் பிரதானம். இதற்கு நடுநடுவே புன்னை.
"தோட்டம் அடர்ந்த காடு மாதிரி இருக்கிறதாலயும் நிறைய மரங்களோடயும் இருக்கறதால ரொம்பக் குறைவான மகசூல் தான் எனக்குக் கிடைக்குது. 18 வயது மரத்துல இருந்து வருஷத்துக்கு வெறும் 10 கிலோ பருப்புதான் எடுக்கிறேன். போதிய சூரிய வெளிச்சம், ஓரளவு தண்ணி வளம் இருந்தா .. 5 வயசு மரம் ஒரு வருஷத்துக்கும் கண்டிப்பா 15 கிலோவுக்கு குறையாம பருப்பு  கொடுக்கும் " என்கிறார் ராஜசேகர்.


புன்னையின் சிறப்பு'

மு. பாலசுப்பிரமணியன்

இன்றைய உலகை ஆட்டுவிக்கும் அல்லது இயக்கும் ஆற்றலான பெட்ரோலியப் பொருள்கள் இன்னும் கொஞ்ச நாளில் படிப்படியாக மறைந்து போகும் என்பதை அனைவரும் அறிவர்.

இதற்கு மாற்று எரிபொருள்களைத் தேடுவதில் உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. நீடித்த, சுற்றுச்சூழலைக் கெடுக்காத ஆற்றல் வளங்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றான செடியின எரிபொருள்களைத் தேடுவதில் அறிவியல் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செடியின எரிபொருள்கள்தாம் உண்மையில் பண்டைய எரிபொருள்கள் ஆகும்.

வீட்டு விளக்குகளிலும், விளக்குத் தூண்களிலும் ஏன் கலங்கரை விளக்கங்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பயிரின எண்ணெய்கள் அந்தந்தப் பண்பாட்டு, சூழல் வாய்ப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை போன்ற பெருநகரங்களின் தெருவிளக்குத் தூண்களிலும், கோயிலின் தூண்டாமணி விளக்குகளிலும் இந்த எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென்று பல்வேறு எண்ணெய் தரும் பயிரினங்கள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக புன்னை, இலுப்பை, ஆமணக்கு போன்றவை எரிபொருளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. இவை "உண்ணா எண்ணெய்' என்ற பிரிவைச் சாரும். உண்ணும் எண்ணெய் வகைகளான எள், தென்னை போன்றவை தனி.

ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி நாகைக் கடற்கரை. அங்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி செழித்து நின்றது புன்னை மரம்.

புன்னை இலக்கியவாணர்களின் ஓர் இனிய பயிர். சங்க இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் மரமும் இதுவே. குறிப்பாக நெய்தல் பற்றிப் பாட முனையும் புலவன் புன்னையைத் தொடாமல் போவதில்லை. இந்தப் புன்னை மரத்தில் காய்த்துக் கொட்டுபவைதான் புன்னங் கொட்டைகள்.

பண்டைத் தமிழ்ச் சமூகம், மரங்களையும் உடன் பிறந்தவர்களாகப் பாவித்து வந்தனர். அவ்வகையில் புன்னை மரமும் அவர்களது வாழக்கையின் அங்கமாக இருந்து வந்தது.

ஒப்பீட்டளவில் மற்ற எரிபொருள் மரங்களைவிட அதிகப் பயன் தருவதாக புன்னை மரம் உள்ளது. இதன் பொருளியல் மதிப்பைப் பார்ப்போம்.

புன்னை விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை நேரடியாக மோட்டார்களில் பயன்படுத்த முடியும். வெளியாகும் புகையின் அளவும் குறைவாக இருக்கும். எண்ணெயின் தேவையும் டீசலை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு மணி நேரம் இயங்குவதற்கு 900 முதல் 1000 மிலி டீசல் தேவை எனில் அதுவே புன்னை எண்ணெய் 600 மிலி என்ற அளவே போதுமானதாக இருக்கிறது. அத்துடன் கரும்புகையின் அளவு டீசலில் அதிகமாக இருப்பதுடன் மிக எரிச்சலூட்டும் நெடியும் இருக்கும். ஆனால் புன்னை எண்ணெயைப் பயன்படுத்தும்போது புகை குறைவாக வரும். அத்துடன் விரும்பத்தக்க மணமும் இருக்கும்.

அதாவது ஒரு கோயிலினுள் இருக்கின்ற உணர்வு ஏற்படும். எந்திரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது அதைவிட கூடுதல் பயன்.

எடுத்துக்காட்டாக டீசல் விலை லிட்டருக்கு 33 ரூபாய். அதேசமயம் சந்தையில் புன்னை எண்ணெயின் விலை லிட்டருக்கு 40 ரூபாய். ஆனால் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 600 மிலி புன்னை எண்ணெய் போதுமானது. எனவே இதன் உண்மையான விலை 24 ரூபாய் மட்டுமே!

ஒரு பண்ணையாளர் தமக்குத் தேவையான அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் தனது பண்ணையில் வளரும் புன்னை மரத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள முடியும். அவர் பிற மின்சாரத் தேவைகளுக்குக்கூட அரசு நிறுவனங்களையோ தனியார் நிறுவனங்களையோ அண்டியிருக்க வேண்டியதில்லாத சுயசார்பு உள்ளவராக மாற முடியும்.

முந்தைய காலங்களில் வண்டிகள் செய்வதற்கு இந்த புன்னை மரத்தையே பயன்படுத்தி உள்ளனர். இது கனமற்ற ஒரு மரம். அத்துடன் இதில் உள்ள எண்ணெய்ச் சாரம் பூச்சிகள், கரையான்கள் இவற்றின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்கும் தன்மை கொண்டது.

இப்போது மண்வெட்டி போன்ற வேளாண்மைக் கருவிகளுக்கு கைப்பிடிகளாக புன்னை மரம் பயன்படுகிறது.

இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் வளம் அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமெனில் இதற்கு நீர் எடுத்து ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தடி நீர் வளம் குறைவான இடங்களில் நீர் எடுத்து ஊற்றி வளர்க்க வேண்டும்.

இம்மரம் பசுமைமாறா மரவகையைச் சேர்ந்தது. எனவே எப்போதும் இது பச்சை இலைகளோடு காணப்படும். இலைகள், காம்புகளில் பால் வடியும் தன்மை உள்ளது. அதனாலேயே வளப்பான பச்சையம் பெற்றிருக்கிறது. அதிக அளவிற்கு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

இந்த மரத்தில் எப்போதும் பூக்கள் இருக்கின்றன, காய்களும் இருக்கின்றன. காட்டாமணக்கு, புங்கை போன்று அல்லாமல் எல்லாக் காலத்திலும் காய்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதன் அறிவியல் பெயர் "கோலோபில்லம் ஐனோபில்லம்'.

தமிழ்நாட்டின் சிறப்புப் பயிரான இம் மரத்தை அதிக அளவில் பெருக்கினால் நாட்டின் மாற்று எரிபொருள் தேவையை நிறைவு செய்து விடலாம். கோடிக்கணக்கில் பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்யும் செலவும் மிச்சமாகும்.

புன்னை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதன் முலம் நல்ல வளமான காடுகளையும் உருவாக்கிவிடலாம். இது சுனாமி போன்ற கடலோரப் பேரழிவைத் தடுக்கும் அரணாகவும் விளங்கும். தமிழகத்தின் 700 கி.மீ. தொலைவு நல்ல கடலரண் ஒன்று கிடைக்கும்.

அன்றைய சங்கத் தமிழ்த்தாய் சொன்ன புன்னையின் சிறப்பை இன்று நாம் உணர்ந்து பயன்படுத்துவோம்.



 இணையத்திலிருந்து
Engr.Sulthan

__._,_.___

Attachment(s) from Mohammad Sultan

1 of 1 File(s)

Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக