மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்

பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.

'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)

'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)

'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:55)

எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62 வசனங்களும் கூறுகின்றன. கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான்.

இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். 30:55 வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56 வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.

'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் 'அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:56)

0 Responses

கருத்துரையிடுக