"நேரமில்லை" – ஓர் இஸ்லாமியப் பார்வை! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை! நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை! முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது. இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற 'முஸ்லிம் சிறுபாண்மையின' பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்! ஜூம்ஆவிற்கே இந்த நிலை என்றால் மற்ற நேரத் தொழுகைகளைப் பற்றி பேசவே தேவையில்லை! இந்தச் சூழ்நிலையில் மார்க்க அறிவு அறவேயில்லாத அல்லது போதிய மார்க்க அறிவில்லாமல் வளர்க்கப்படுகின்ற அந்த சிறுவன் வாலிப பருமடைந்து கல்லூரிக்குச் சென்றால் அவன் சேருகின்ற கல்லூரியைப் பொறுத்து அவன் சிறுபிராயத்தில் நடைபெற்ற அதே நிகழ்வு ஏற்படுகின்றது. சிறுபாண்மையினரால் நடத்தப்படுகின்ற ஒருசில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயில்கள் போன்றவை கட்டித் தரப்பட்டிருந்தாலும் கல்வித் தரம், கல்வி நிறுவனத்தின் மதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம் பெரும்பாண்மையான முஸ்லிம் மாணவர்கள் விரும்புவது என்னவோ மாற்று மதத்தவர்களால் நடத்தப்படும் இஸ்லாமிய சூழல்களில்லாத கல்வி நிறுவனங்களைத் தான்! எனவே இங்கேயும் அந்த மாணவர்களால் இஸ்லாத்தைப் பற்றி பயில்வதற்கு வாய்ப்பு குறைந்து விடுகின்றது. அவர்கள் படிப்பை முடித்தவுடன் மூஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. அப்படியே ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டால் அந்த வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தம் மேலதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டியதிருக்கின்றது. இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து ஒருவழியாக நல்ல வேலையில் செட்டில் ஆனவுடன் திருமணம்! பிறகு சந்தோசமான குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்; பிறகு அக்குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி என்று ஹாஸ்பிடல் அலைச்சல்; பிறகு அக்குழந்தைகளை பள்ளிக்கூடம் சேர்த்து நம்மைப் போலவே அக்குழந்தைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்! அண்டை வீட்டார்களெல்லாம் புதிய சொகுசு வீடு கட்டி வசதியாக வாழ்வது போல் நாமும் புதிய பங்களா கட்டி நல்ல முறையில் வாழ வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல், நேரம் காலம் பார்க்காமல் பகுதி நேர ஊழியம் கூட பார்த்து பொருள் ஈட்ட வேண்டும்! அதற்கு நம் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் பரவாயில்லை! ரிடையர்ட் ஆனவுடன் அமைதியான முறையில் வாழவேண்டும்! இவ்வாறாக ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்க்கை அலுவலகம், வீடு, மனைவி மக்களை கவனிப்பது என்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அலுவலக நேரம் போக மீதமுள்ள நேரங்கள் டீ.வி, நியூஸ், இமெயில், இன்டர்நெட் பிரவுசிங் ஆகியவற்றுக்கே போதவில்லை! குழந்தைகள் பருவ வயதையடைந்து பள்ளிப்பருவத்தின் இறுதியை அடைந்துவிட்டால் அவர்களை நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி அல்லது பயன்தரும் படிப்பைத் தருகின்ற பிற நல்லக் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அவர்களின் படிப்பின் மீது நமது நேரங்களைச் செலவிட்டு அவர்கள் நன்றாக படிக்கின்றார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பின்னர் அவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிகமாக கேபிடேசன் ஃபீஸ் கட்ட வேண்டும்; அதற்காக கடினமாக உழைத்து அதிக பொருளீட்ட வேண்டும். ஒருவழியாக அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்வித்து அழகுபார்க்க வேண்டும். பிறகு பேரக்குழந்தைகள், அவர்களோடு கொஞ்சுவது, அகமகிழ்வது அப்பப்பா! வாழ்க்கையிலே நேரமே போதவில்லை!! நீங்களும் இந்த சராசரி முஸ்லிமின் வட்த்திலிலுள்ளவரா! அப்படியாயின் இந்தக் கட்டுரை உங்களுக்களுக்காகத் தான். தொடர்ந்து வாசியுங்கள்! இந்த சராசரி முஸ்லிமிடம் போய் தொழுகை, மார்க்க கல்வியைக் கற்பது பற்றிப் பேசினால் அவர்களின் உடனடி பதில் 'நேரமில்லை' என்பது நாம் சொல்லித் தான் தெரிய வேண்டு மென்பதில்லை! அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் ஒரு பேருண்மையை மறந்து விட்டோம்! ஆம் சகோதர, சகோதரிகளே! அது தான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கம்! இறைவன் நம்மை எதற்காகப் படைத்தான்? எதற்காக இப்பூமியில் வசிக்கின்றோம்? வேலை செய்வது, சாப்பிடுவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது, பிள்ளைக் குட்டிகளுடன் மகிழ்வாக இருப்பது, செல்வம் சேர்ப்பது, காலமெல்லாம் உழைத்து சிறுக, சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது இதுதான் இறைவன் நம்மைப் படைத்ததன் நோக்கமா? இல்லை சகோதர, சகோதரிகளே! நாம் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கம் இதுவல்ல! மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை! அல்லாஹ் கூறுகின்றான்: "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை" (அல்குர்ஆன் 51:56) இங்கு நம்மில் சிலருக்கு ஒரு ஐயம் ஏற்படலாம்! மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வழிபடுவது மட்டுமென்றிருந்தால் நாம் எவ்வாறு உண்பது, உறங்குவது, குடும்ப வாழ்வில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்ய இயலும் என்ற சந்தேகம் எழலாம்! இதுவும் இஸ்லாத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் ஏற்படுவதாகும். "இபாதத் – வணக்கம்" என்பது விரிந்த பொருடைய பதமாகும். சுருங்க கூறுவதென்றால், 'அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் கட்டளையிட்ட ஏவல்-விலக்கல்களை ஒருவர் முறையாகப் பேணி நடந்தால்' அதுவே இபாதத்-வணக்கம்' ஆகும். மற்றொரு வகையில் கூறுவதென்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் காட்டித் தந்த நெறிமுறையில் அமைத்துக் கொள்வாரேயானால் அதுவே வணக்கமாகும். அடுத்தது தொழுகை! நாம் திருமறையை எடுத்துப் படித்தோமென்றால் அதில் பல இடங்களில் தொழுகையைப் பற்றியும் ஜக்காத் பற்றியும் இறைவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம். அந்த அளவிற்கு தொழுகை இஸ்லாத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஒரு முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் உள்ள வித்தியாசமே தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள். முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி) "நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்" (ஆதாரம்: இப்னு ஹிப்பான்) இனி தொழுகையை விடுபவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைப் பார்ப்போம்! நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: 'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. 'அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. '(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். 'இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். 'உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்' எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47) "நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" (அல்-குர்ஆன் 4:103) ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59) "இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்." (அல்-குர்ஆன் 107:4-5) மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: - நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்) எனவே அலுவலக வேலையின் காரணமாகவோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் காரணமாகவோ "நேரம் கிடைக்கவில்லை! அதனால் தொழவில்லை" என்ற கூற்று அடிப்படையற்ற இஸ்லாத்திற்கு முரணான வாதமாகும் என்பதையும் மனிதன் படைக்கப்பட்ட முதல் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும். தொழுகைக்கு கூட அனுமதியில்லாத இடங்களில் வேலை செய்வதைப் பற்றியும் நாம் மறுபரிசீலனை செய்து இஸ்லாமிய சூழல் நிறைந்த வேலையில் சேருவதற்கு நம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பிரதான கடமையாகிய தொழுகையை விட்டுவிடக்கூடாது. முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசமே தொழுகை என்றிருப்பதால் அத்தொழுகையை நிறைவேற்றுவதற்கு எங்கு வசதிப்படுமோ அவ்விடத்தை நோக்கி அல்லது தொழுகைக்கு இடையூறு ஏற்படுத்தாத நிறுவனம் எதுவோ அதில் சேர்ந்து நம்முடைய பணியினை அமைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் இப்பூமியோ விசாலமானது! இறை மறுப்பாளர்களின் சூழலில் நாம் விரும்பி சேர்ந்துக் கொண்டு பிறகு அங்கு இறைவணக்கத்திற்கு நேரம் கிடைக்கவில்லை அல்லது அவர்கள் எங்களை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை என்பது அறிவுடைய வாதமாகாது! மாறாக நஷ்டத்திற்குள்ளானதுமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: "(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது, 'நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?' என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) 'நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்" (அல்-குர்ஆன் 4:97-98) அடுத்ததாக, 'மனிதப் படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதே' என்றிருப்பதால் அவன் தன் வாழ்வை இறைவனை வணங்குவதற்காகவே அமைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். அதாவது அவன் தன்வாழ்வை இஸ்லாமிய வாழ்வு நெறியில் அமைத்துக்கொள்வது! இஸ்லாமிய வாழ்வு நெறி என்றால் என்ன? எவை எவை அவசியமானவை? எவை எவற்றை அவசியமாக நிறைவேற்ற வேண்டும்? எவை எவற்றை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டணை உண்டு? எந்தெந்த காரியங்களைச் செய்தால் ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்ல நேரிடும்? (நவூதுபில்லாஹ்), எந்தெந்த காரியங்களைச் செய்தால் நாம் இரவு, பகல் பாராமல் கண்விழித்து கஷ்டப்பட்டுச் செய்த தொழுகை, காலமெல்லாம் உழைத்துச் சேர்த்த செல்வங்களையெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் ஜக்காத் கொடுத்தது, பகலெல்லாம் பட்டினி கிடந்து நோற்ற நோன்புகள் போன்ற அமல்கள் எல்லாம் மறுமையில் பரத்தப்பட்டப் புழுதியைப் போன்று எவ்வித பலன்களும் இல்லாமல் பாழாகிவிடும்? (நவூதுபில்லாஹ்) எந்தெந்த காரியங்களைச் செய்தால் மறுமையில் இறைவனுக்கு உகந்த அவனுடைய நல்லடியார்களின் கூட்டத்தினருடன் சுவர்க்கச் சோலையில் நுழைவோம்? எந்தெந்த காரியங்களைச் செய்தால் நரகத்தின் அடிப்பாதாளத்திற்கு முகம் குப்புறத் தள்ளப்படுவோம்? (நவூதுபில்லாஹ்) இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்வது எப்படி? அன்பு சகோதர, சகோதரிகளே! இவ்வுலக வாழ்க்கையில் சொகுசான வீடு, கார் மற்றும் இன்னபிற வாழ்க்கை வசதிகளுடன் வாழ்கின்ற மற்றவர்களைப் போல நாமும் நமது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு! பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொள்வதையோ அல்லது அதற்கு வழிவகுக்கின்ற இவ்வுலகக் கல்வியைக் கற்பதையோ இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை! மாறாக இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது. ஒரு முஸ்லிமின் வெற்றி என்பது மறுமையில் சுவர்க்கத்தை அடைவதாகும்! இதுவே மகத்தான வெற்றி! மறுமை வெற்றியை புறந்தள்ளியவர்களாக மறுமைக்குப் பலனளிக்காத இவ்வுலகக் கல்வியை மட்டும் பலவருடங்கள் பயின்று இவ்வுலகில் கோடி கோடியாக சம்பாதித்து இவ்வுலக வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தால் நிச்சயமாக அது நம்முடைய வெற்றியல்ல! மாறாக அது நம்மை மறுமையில் மிகப்பெரிய கைசேதத்தில் ஆழ்த்திவிடும். அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாகவும். அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) நீர் கூறுவீராக: 'இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது" (அல்-குர்ஆன் 4:77) அழியக்கூடிய இவ்வுலகத்தின் அற்ப சுகங்களை அடைவதற்காக அழிவே இல்லாத மறுமை வாழ்வை புறந்தள்ளியவர்களாக இவ்வுலகக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து மார்க்கக் கல்வியைப் புறக்கணித்தோமேன்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் கூறுகின்றான்: "எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். எனவே, எவன் வரம்பை மீறினானோ- இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்" (அல்-குர்ஆன் 79:34-39) எனவே நாம் இறைவனின் வழிகாட்டுதலின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு மார்க்கக் கல்வியைக் கற்பது அவசியமாகும். இம்மையில் வெற்றிபெற இவ்வுலகக் கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அது போல மறுமையில் வெற்றி பெற மார்க்கக் கல்வியை கற்பதும் அவசியமாகும். இதை முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியிருக்கிறார்கள். "ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்" (திர்மிதி) எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைககளை பள்ளிக்கு அனுப்பி ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் இவ்வுலகக் கல்வியைப் பயிற்றுவிக்கும் போது குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவழித்து மறுமைக்குப் பலனளிக்கக் கூடிய மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அடுத்து நம்முடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது எந்தப் பள்ளியில் தரமான கல்வியுடன் மறுமைக்குப் பலன்தரும் மார்க்கக் கல்வியையும் சேர்த்துக் கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பார்த்து சேர்க்க வேண்டும். அடுத்து சமுதாய நலனில் அக்கரை உள்ள நமது சகோதர, சகோதரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைகளுக்கு மார்க்கக்கல்வியை போதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் உலகக் கல்வியில் சிறந்து விளங்குவதோடு அல்லாமல் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் மார்க்க கல்வியையும் சேர்த்தே போதிக்கின்ற சிறந்த கல்வி நிறுவனங்களாக மாறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். வசதியுடைய சகோதரர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபோன்ற பள்ளிக்கூடங்கள் பலவற்றை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து வெளிவரும் ஒரு மாணவன் பொறியியல், மருத்துவம் போன்ற சிறந்த மேற்கல்விக்கு தகுதியான சிறந்த மாணவனாக வெளிவருவதோடல்லாமல் குர்ஆன், ஹதீதுகள் மற்றும் இறைவன் நமக்கருளிய சட்டத்திட்டங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதை பிறருக்கு எடுத்துச் சொல்கின்ற அளவிற்கு சிறந்த ஆலிமாகவும் அவன் வெளிவர வேண்டும். இது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சாத்தியமானதே! If there is a will, there is a way! இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் பல வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இது போன்ற கல்வி நிறுவனத்தை துவக்கி தலைசிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார். எனவே நாமும் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ் நமது வருங்கால சந்ததியினர் சிறந்த மார்க்க அறிவைப் பெற்ற ஆலிம்களாகவும் அதே சமயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாகவும், மருத்துவ மேதைகளாகவும் திகழ்வார்கள். அடுத்ததாக நாம் நம்முடைய அலுவலக நேரம் போக மீதியுள்ள நேரங்களிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் நமது குடும்பத்திற்காக நமது நேரத்தைச் செலவழித்தது போக எஞ்சியுள்ள நேரங்களை சினிமா, டீ.வி. சீரியல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலும் தேவையற்ற இன்டர்நெட் சாட்டிங், பிரவுசிங் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களில் நம்முடைய நேரத்தை வீணடிக்காமல் நமது மறுமை வாழ்விற்குப் பலன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்பது, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதற்கு முயற்சிப்பது, குர்ஆனின் அரபி இலக்கணத்தைப் படிப்பது, பிறருக்கு குர்ஆனை கற்றுக்கொடுப்பது, மாற்றுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் எடுத்துச் சொல்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தை மற்றவர்களுக்குப் போதிப்பதை இறைவன் நம்மீது விதித்திருக்கின்றான். "காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)." (அல் அஸ்ர் 103: 1-3). இவ்வசனத்தின் மூலம் நஷ்டத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் உபதேசம் செய்வது அவசியம் என்பதை உணரலாம். எனென்றால் நம்முடைய ஒவ்வொரு மணித்துளி நேரத்திற்கும் அதை எந்த முறையில் செலவிட்டோம் என்பதை இறைவனிடம் கணக்குக்கூற கடமைப்பட்டுள்ளோம். "வாழ்நாளை எப்படி கழித்தான்? வாலிபத்தை எதில் ஈடுபடுத்தினான்? செல்வத்தை எப்படி சம்பாதித்து, எவ்வழியில் செலவு செய்தான்? கற்றவைகளில் எதை செயல்படுத்தினான்? என ஐந்து விசயங்கள் பற்றி விசாரிக்கப்படாத வரை மறுமை நாளில் எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடமிருந்து நகர முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி); ஆதாரம்: திர்மிதி. டி.வி, சீரியல், அரட்டை அடிப்பது, வீண் விளையாட்டுகள் மற்றும் பிற பயனற்ற வழிகளில் தமது ஓய்வு நேரத்தைச் செலவழிப்பவர்கள் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மீறியவர்களாவர்கள் என்பதையும் நாம் இங்கு நினைவூட்டுகின்றோம். 'ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி) அன்பு சகோதர, சகோதரிகளே! 'நேரம் பொன் போன்றது' – இது முதுமொழி! இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது உண்மைதான். ஒரே ஒரு முறை நமக்கு இவ்வுலக வாழ்வில் கிடைத்திருக்கின்ற இந்தப் பொன்னான நேரத்தை இறைவனுக்கு உவப்பான வழியில் நாம் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் அதற்குரிய மனவலிமையை நமக்குத் தந்து நம் அனைவரையும் அவனது நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன். நன்றி: சுவனத்தென்றல்.காம்
Engr.Sulthan |