Fwd: (TMP) கியாமத் நாளின் அடையாளங்கள்



---------- Forwarded message ----------
From: hakeem <hakkeemr@gmail.com>
Date: 2010/9/8
Subject: (TMP) கியாமத் நாளின் அடையாளங்கள்
To: TAMIL MUSLIM POLITICS <tmpolitics@googlegroups.com>


மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50



பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777


ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50



குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121



விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231



தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496



பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681



காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

நூல் : திர்மிதீ 2254)



கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061



நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி 1036, 7121



பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.



நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306



பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808



ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல் : முஸ்லிம் 3971, 5098



உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365



பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511



தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493



பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493



சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121



இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121




முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319



யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926



கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.

நூல் : புகாரி 5179



யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 7119



கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 3517, 7117



அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183



எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5191




செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1036, 1412, 7121


ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 1424



மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 3609, 7121, 6936



பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.

நூல் : புகாரி 3176



மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451



அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 3546



மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.



புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)


உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி



யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

(அல்குர்ஆன் 21:96)



ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

(அல்குர்ஆன் 43:61)



மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்



பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)

நூல்: முஸ்லிம்

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.




--
hajas
 
http:llwww.hajacdm.blogspot.com           Tamil Muslim Tube Page
 
 

0 Responses

கருத்துரையிடுக