ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு
ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.
ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை. ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.
பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.
இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.
பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.
தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரிடம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள்.
பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது.
ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதிடத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதிடம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறுபிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கடவுள்கள் உள்பட அனைத்துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மை யென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார்.
ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வரவில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.
எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:
சவாலை ஏற்று வரும் ஜோதிடரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.
ஜோதிடம் என்பதே எதிர்காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திரவாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.
ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.
ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார்.
ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்துள்ளார்.
ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று அறிந்தார்.
ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம். மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்கியத்தனம் என்கிறார்.
--
கருத்துரையிடுக