இஸ்லாமியத் திருமணம்



இஸ்லாமியத் திருமணம்

எல்லாப் புகழும் இறைவனுக்கே! 
 
ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் மீத உண்டாவதாக!
 
'திருமணம்' என்பது எல்லா மக்களாலும் எல்லா மதத்தினராலும் மகிழ்ச்சிகரமாக நடத்தும் வாழ்வியல் நிகழ்ச்சியாகும்.
 
அந்த வைபவத்தை இறைவனும், இறைதூதரும் காட்டிய நெறிமுறையில் செய்யும்போது மனிதன் இம்மை மறுமைப் பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்வான். 'திருமணம்' எனும் நிகழ்ச்சி வெறும் மகிழ்ச்சிக்கே உரிய நிகழ்ச்சியெனக் கருதி கேளிக்கைகளிலும், வீண் விரயங்களிலும் இறங்கி, மார்க்க நெறிகளை மீறிச்சென்று இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டிச் செல்லும் அவல நிலையை இன்று எங்கெணும் காண முடிகிறது. எனவே, சமுதாயத்தில் வேரூன்றியுள்ள களைகளை பிடுங்கி எறிந்து கண்மூடித்தனமான பழக்கங்களை மண்மூடச் செய்து மாற்றாரும் போற்றும் நமது உயர்ந்த நெறிகளை மக்களுக்கு உணர்த்தி, இஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன? அதை எவ்வாறு நடத்துவது? என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
 
 அந்த நல்ல நோக்கம் நிறைவேற வல்லான் இறையை வேண்டுகிறோம்.

 இஸ்லாமியத் திருமணத்திற்குத் தேவை
 
 1. சீதனமா? சீர் வரிசைகளா ?
 2. சடங்குகளா ? சம்பிரதாயங்களா?
 3. ஊர்வலமா? ஊர்திகளா?
 4. மேளதாளங்களா? வாத்தியங்களா?
 5. பூமாலையா ? பூச்செண்டுகளா?
 6. ஆரத்தியா? ஐதீகங்களா?
 7. தாலியா? கரிசைமணியா?
 8. குத்பாவா? வேதமந்திரங்களா?
 9. அல்லிஃப் பைனஹுமாவா? 
     அல்ஃபாத்திஹாவா?
 10. கட்டித்தழுவுவதா? காலில் விழுவதா?

ஒரு திருமணம் முழமை பெற தேவையானவை:-

 1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
 2. மணமக்களின் முழமையான சம்மதம் (ஈஜாபு , கபூல்)
 3. இரு நீதமுள்ள சாட்சிகள் (ஷாஹித்கள்)
 4. மணமகளுக்கு உரிமையுள்ள (மஹர்)
 
 இவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

"நோக்கம்"

இறைவனின் படைப்பு:
 
 உலகிலுள்ள படைப்புகள் யாவும் ஜோடிகளாகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை இறைவேதம்1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது.  இதை இன்றைய விஞ்ஞானமும் நிருபித்துள்ளது.
 
'நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகவே நாம் படைத்துள்ளோம்.'
அல்குர்ஆன் 78:8, 51:49, 53:45, 75:39 

மனிதன் பிறந்து வளர்ந்து பருவமடைந்ததும் தனக்குரிய துணையைத் தேர்ந்தெடுத்து வாழவேண்டும் என்பது இறை நியதியாகும்.
 
'நீங்கள் மனதிற்கிசைந்தோரை மணந்து வாழுங்கள்' என அல்குர்ஆன் (4:3) வலியுறுத்துகிறது.
 
 
படைப்பின் நோக்கம்:
 
மனித சமுதாயம் பல்கிப் பெருக வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாகும்.
 
'மக்களே! ஓரே ஆன்மாவிலிருந்து உங்களைப் படைத்த இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிலிருந்து அதன் துணையையும் படைத்து அவ்விருவரிலிருந்தே ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகுமாறு செய்தான்'
அல்குர்ஆன் (4:1)
 
சந்ததிகள் பெருக:
 
சந்ததிகள் பெருக ஆணும் பெண்ணும் இணைந்து நெறியோடு வாழவேண்டும். அவர்கள் சீராக வாழ இறைவன் அவ்வப்போது இறை தூதர்களை அனுப்பி, அவர்களை மனித சமுதாயத்திற்கோர் முன்மாதிரியாகவும் ஆக்கியுள்ளான். அவர்களும் திருமணம் செய்து மனைவி மக்களோடு வாழ்ந்துள்ளனர்.
 
'(நபியே) உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும் மனைவி, மக்களையும் அவர்களுக்கு ஆக்கியுள்ளோம்' என் அல்குர்ஆன் 13:38 வசனம் கூறுகிறது.
 
ஆகவே திருமணம் என்பது இறைத்தூதர்கள் யாவரும் காட்டிய நெறியாகும்.
 
 
 நபிவழி
 
இஸ்லாத்தில் துறவறம் என்பது கிடையாது, நபிகள் நாயகம்(ஸல்) பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்ததோடு, 'நான் திருமணம் செய்துள்ளேன். எனவே யார் எனது வழிமுறையை விட்டுவிடுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்' எனக்கூறி திருமண வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள்.
 
 
திருமணம் ஏன்?
 
திருமணம் ஏன் செய்யவேண்டும்? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே விளக்கம் தந்துள்ளார்கள்.
 
திருமணம் என்பது (தீய பார்வைகளை விட்டும்) பார்வையை தடுக்கிறது. (தீய தொடர்புகள், விபச்சாரம் போன்றவைகளிலிருந்து) கற்பை காத்து நிற்கிறது.
 
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
 
திருமணம் என்பது மனிதன் வாழ்க்கையில் வழுக்கி விடாமல் தடுத்து நிறுத்தும் அரண் என்பதை இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.
 
 
இன்றைய காலத் திருமணம்
 
இன்று திருமணம் என்பது சம்பிரதாயச் சடங்குகளைக் கொண்ட கோலாகல விழாவாக மாறிவிட்டது.
 
ஐந்தே நிமிடங்களில் நடந்தேற வேண்டிய ஓர் எளிய நிகழ்ச்சி ஐந்து மாதங்கள் முதல் ஐந்தாண்டுகள்வரை தயாரிக்கப்படும் இமாலய முயற்சியாகி விட்டது.
 
செல்வந்தர்களுக்கு இது ஓர் ஆடம்பர விழா! நடுத்தர மக்களுக்கு ஒரு கடின விழா! எளியவர்களுக்கு ஒரு கனவு விழா எண்ணிப்பார்க்கவே உள்ளம் வெதும்புகிறது.
 
அப்படியானால், திருமணத்தைப் பற்றி அறிவுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ன கூறுகிறது? அது கூறும் இனிய மார்க்கம் என்ன? எளிய வழி என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
 
 
நிகாஹ் என்பதன் பொருள்
 
திருமணத்திற்கு 'நிகாஹ்' என அரபியில் சொல்லப்படும். அதன் விரிந்த பொருள் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
 
'நிகாஹ்' என்பதற்கு திருமண ஒப்பந்தம் செய்தல், அல்லது மனைவியுடன் உடல் உறவு கொள்ளுதல் என்பது அகராதிப்படி பொருளாகும்.
 
நிகாஹ் என்பதற்கு மார்க்க ரீதியான பொருள்: 'ஆண், பெண் இருவருக்கிடையிலான ஒப்பந்தம்' என்பதாகும். அதன் குறிக்கோள் 'அவ்விருவரும் ஒருவர் மற்றவரின் மூலம் சுகம் அனுபவிப்பதும் நல்லதொரு குடும்பத்தை அமைத்து சீரான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதுமாகும்.
 
"விதி முறைகள்"
திருமணம் புரிவோ் கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள்
 
திருமணம் செய்ய முன்வருவோர் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 
1. மணப்பெண்னை தேர்வு செய்தல்
 
திருமணத்தின் முதற்படி, மணப் பெண்ணைத் தேர்வு செய்வதாகும். அப்பெண் எப்படி இருக்க வேண்டும்? 
இஸ்லாம் கூறும் தேர்வு முறை
 
ஒரு பெண் அவளது செல்வம், குடும்பம், அழகு, மார்க்கப்பற்று என்ற நான்கு விசயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
.
 
இவற்றுள் செல்வமும் அழகும் நிரந்தரமானவையல்ல. குடும்பம் கௌரவம் என்பது இறையச்சம் (தக்வாவைப்) பொறுத்தது.
 
எனவே, இந்த ஹதீஸ் மார்க்கப் பற்றுள்ள இறை பக்தியுள்ள பெண்ணை மணப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.
 
'மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுப்பதால், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறும் முறைப்படி வாழ்வாள். இறையச்சமுடையவளாகவும் இருப்பாள். கணவனுக்கேற்ற காரிகையாக விளங்குவாள். தன் பொறுப்புகளை உணர்ந்தவளாக செயல்படுவாள்.
 
'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி மறுமையில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டுக்கு பொறுப்பாளி ஆவாள். அவளிடம் தமது பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
 
'சிறந்த மனைவி அமைவதே ஒரு மனிதன் பெறும் மிகப்பெரிய பேறாகும்.'
 
நபிகள்ள நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'உலகம் ஒரு செல்வமாகும். அந்த செல்வங்கள் அனைத்திலும் சிறந்தது (ஸாலிஹான) நல்லொழுக்கமும் நற்பண்பும் மிக்க நல்ல பெண்மணியாவாள்' ( அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி)
ஆதாரம்: முஸ்லிம்.)
 
இறையச்சம், மர்க்கப்பற்றும், நல்லொழுக்கமும் மிக்கப் பெண்ணே சிறந்த மனைவியாகத் திகழமுடியும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.
 
 
2. பெண்ணைப் பார்த்து மண முடித்தல்
 
தேர்வு செய்த பெண்ணை மணமகன் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நபித் தோழர் முகீரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ள பேசியிருந்தேன். (சிச்சயித்திருந்தேன்) இதனை அறிந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நீர் அப்பெண்ணைப் பாhர்த்துக் கொள்வீராக: ஏனெனில், அது உங்களிருவருக்கிடையே அன்பையும், நட்பையும், இணக்கத்ததையும் ஏற்படுத்தும் (பின் விவகாரமாகி விடக்கூடாது) என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். ஆதாரம்: அஹ்மத், திர்மிதி.
 
ஆனால் இன்றைய சமுதாயத்தில், இத்திருமண ஒழுங்கை கடைபிடிக்காமல் பெற்றோர் கட்டாயத்திற்காகத் திருமணம் முடித்து, பின்னர் பெண்ணை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அல்லது கணவனை பிடிக்கவில்லை என்பதற்காக மணமுறிவு (தலாக்) ஏற்படுவதையும் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கின்றோம்.
 
ஏனெனில் ஒவ்வொருவரும் தனது வாழ்க்கைத் துணைவியைப் பற்றி மனதில் பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கொண்டிருப்பர்.
 
மணப்பெண்ணை பார்க்காமல் மணம் செய்து. பின்னர் தமது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைந்து விட்டால், இல்வாழ்க்கையே பாதித்து விடுகிறது. எனவேதான், பின்னால் வரும் இவ்விளைவுகளை தவிர்க்க முன்கூட்டியே மணமகன் மணப்பெண்ணைப் பார்க்கவும் மணமகள் மணமகனை பார்க்கவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 
 
3. பெண்ணை நேரில் பார்த்தல்
 
மேலும், முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக. தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடிய கை, முகத்தைத் தவிர (வேறு எதையும் வெளியே காட்டலாகாது.)
அல்குர்ஆன்: 24:31.
 
மேற்கூறிய மறைவசனம் மணமுடிக்கும் மணமகன் பெண்ணை நேரில் பார்க்க விரும்பினால், அனுமதிக்கப்பட்ட அவளது முகம், முன்கைகளை மட்டுமே பார்க்கலாம் என்பது தெளிவாகிறது.
 
மேலும், அப்பெண்ணை நேரில் பார்க்கும்போது, அவளை மணக்கத்தடை விதிக்கப்பட்ட மஹ்ரமான ஒருவரையும் இருக்கச் செய்ய வேண்டும். அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கக்கூடாது.
 
அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியுள்ள ஒருவர் அப்பெண்ணிடம் அவளைத் (திருமணம் செய்ய) ஹராமான ஒருவர் இல்லாமல் தனிமையில் இருக்க வேண்டாம். (அப்படி இருந்தால்) அவ்விருவருடன் மூன்றாவது நபராக ஷைத்தான் உள்ளான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அஹ்மத்.
 
ஆகவே மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதலில் மார்க்கப் பற்றும் ஒழுக்கமும் மிக்க பெண்ணாக தேர்நதெடுத்து அவளை நேரிலும் பார்த்து அதன் பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்பதை நபி மொழிகளிலிருந்து அறியலாம்.
 
 
ஒரு திருமணம் முழுமைபெற தேவையானவை
 
 மணமகன் – மணமகள்
 
 1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
 2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)
 3. இரு நீதமுள்ள சாட்சிகள்
 4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
 
 என நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையிட்டார்கள்.
 
 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
 
 
5. மணப் பெண்ணின் சம்மதம் பெறுதல்
 
மணமகன் பெண்ணைப் பார்த்து சம்மதிப்பது போல் மணப்பெண்ணும் சம்மதிக்க வேண்டும். பெற்றோர் நிர்பந்திக்கும் பெண்ணையோ, ஆணையோ மணக்க வேண்டும் என்ற கட்டாயம் இருவருக்கும் இஸ்லாத்தில் இல்லை.
 
'கண்ணிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்' என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம். 
 
6. மஹர் கொடுத்து மணமுடித்தல்
 
மஹர் என்பது திருமணத்தை முன்னிட்டு மணமகன் சார்பாக மணமகளுக்கு வழங்கப்பட வேண்டிய பெண்ணின் உரிமையாகும்.
 
இன்று மஹர் என்பது ஒரு சம்பிரதாய் சடங்காகி விட்டது. ஜமாஅத் ஏடுகளில் மட்டும் எழுதப்பட்டிருக்குமே தவிர மணப்பெண்ணுக்கு வழங்கப்படுவதே இல்லை. மஹர் என்றால் என்ன? இதை யார் எப்போது கொடுப்பது? மஹரை நிர்ணயிக்கும் உரிமை யாருக்குரியது? என்பது கூட அறியாதவர்களே இன்று இமாமாக இருந்து நிகாஹ்வை நடத்தி வைக்கிறார்கள்.
 
இது அவசியம் வழங்கப்பட வேண்டுமென பின்வரும் இறைமறை கட்டளை இடுகிறது.
 
மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். அல்குர்ஆன்: 4:4
 
"மஹர்"
 

மஹர் வசதிக்கேற்றசாறு வழங்கலாம்.
 
1. பணம்
 
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்கு 12.5 ஊகியா (சுமார் 500 திர்ஹம் அதாவது 6500 ருபாய் வரை) மஹர் வழங்கியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்:
அறிவிப்பாளர்: அபூஸலமா(ரலி)
ஆதாரம்: முஸ்லிம்,அபூதாவூது,அஹ்மத்,நஸயீ,இப்னுமாஜா.
 
2. நகை (தங்கம், இரும்பு)
 
நாயகத் தோழர் அப்துர் ரஹ்மான இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் தங்கத்தில் ஒரு சிறு அளவை தம் மனைவிக்கு மஹராகக் கொடுத்தார்கள்.
ஆதாரம்: புகாரி.
 
ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணமுடியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்: ஸஹ் இப்னுஸகத் (ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
 
 
3. தோட்டம்
 
ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களின் மனைவி ஒரு தோட்டத்தையே மஹராகப் பெற்றிருந்தார் (சுருக்கம்)
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
ஆதாரம்: புகாரி, நஸயீ.
 
4. கல்வி புகட்டல்
 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நாயகத் தொழர் ஒருவர் மஹர் கொடுக்க வசதியே இல்லாதபோது அவருக்குத் தெரிந்த குர்ஆனின் சில அத்தியாயங்களை மணப்பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பதையே மஹராக நிர்ணயித்தார்கள்.
அறிவிப்பாளர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
 
 
5. அடிமைத்தழையிலிருந்து விடுதலை
 
ஒரு அடிமையை உரிமைவிட்டு அதையே மஹராக அறிவித்தார்கள் நபியவர்கள்.
 
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
பெருமானார்(ஸல்) அவர்கள் ஸபிய்யா என்னும் பெண் போர்க்கைதியை விடுதலை செய்து அதையே மஹராக அவர்கள் மணந்து கொண்டார்கள்.
 
 
6. இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள்
 
இயலாதோருக்கு காலணிகள், பேரீத்தம் பழங்கள், துணிமணிகள் தேவiயான பொருட்கள் போன்றவற்றையும் மஹராக வழங்கலாம் என்பதை நபிமொழிகள் அறிவிக்கின்றன.
 
ஒரு பெண்மணிக்கு காலணிகளை வழங்கி திருமணம் செய்ய அனுமதித்துள்ளார்கள்.
 
அறிவிப்பாளார்: ஆமிர் இப்னு ரபீஆ (ரலி)
ஆதாரம்: திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா.
 
 
7. இஸ்லாத்தை தழுவுதல்
 
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதையே மஹராக நிர்ணயித்திருப்பதை இஸ்லாம் வரவேற்கிறது.
 
நாயகத்தோழி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹா என்பவர் தம்மை மணம் செய்ய விரும்பியபோது 'நீர் முஸ்லிமானால் அதுவே எனக்கு மஹராகும் அதைத்தவிர வேறு எதையும் மஹராகக் கேட்க மாட்டேன்' எனக் கூறினார்கள்.
 
'இஸலாத்தை ஏற்பதையே மஹராக இருந்தது' என அவரது மகன் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: நஸயீ.
 
(இஸ்லாத்தை தழுவுவதே தனக்கு மஹராகும் என உலகில் அறிவித்த ஓரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.)
 
மஹரில் வரையறை இல்லை
மஹர் என்பதற்கு சில ஊர்களில் சில வரையறைகளை வகுத்துள்ளார்கள். அதிகப்படியாக கொடுக்க விரும்பினாலும் அதை சில ஊர் ஜமாஅத்தினர் அனுமதிப்பதில்லை. 51 ரூபாய், 97.5 ரூபாய், 101 ரூபாய் என மஹ்ரை நிர்ணயம் செய்திருப்பது வேதனைக்குரியதாகும். திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணுமே மஹரைப் பற்றிப் பேசிக் கொள்ளவேண்டுமே தவிர மற்றவர்கள் மஹரை நிர்ணயிக்க முடியாது.


'மறரைப் பற்றி பேசவும் கூட்டவும் குறைக்கவும் தகுதி பெற்றோர் மணமக்களே 4:24 மறைவசனம் தெரிவிக்கிறது.
 
மஹரின் உரிமை

பெண்தான் மஹரைக் கேட்க வேண்டும். அந்த உரிமையை இஸ்லாம் அவளுக்கு வழங்கியுள்ளது. மணமகன் மஹ்ரை கொடுக்கக் கடமைப்பட்டிருப்பதால் அவள் கேட்கும் தொகையை அவன் கொடுத்தாக வேண்டும்.

உம்மு ஸுலைம்(ரலி) அவர்களே மஹரை முடிவு செய்த ஹதீஸ் மூலம் மஹரை தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கே உரியது என்பதை புரிந்து கொள்ளலாம்.
 
மஹரின் அளவு

எதையும் எளிதாகச் செய்ய வேண்டுமென விரும்பும் இஸ்லாம், மஹரையும் குறைவாக இருப்பதே சிறப்பிற்குரியது. அது எளிய மக்களுக்கு ஒரு சுமையாகி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது.

'குறைவான மஹரே மிகச் சிறந்தது' என நபிகள் (ஸல்) அவர்கள் குறிப்பிடுள்ளதாக உக்பத் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்: அபூதாவூது. ஹாக்கிம்.


எனினும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பதில் தவறில்லை இருப்பவர் தாராளமாகக் கொடுக்கலாம்.
இரும்பு மோதிரம் முதல் தங்கப்புதையல் வரை கொடுக்கலாம்.
ஒரு (கின்தாரை) பொற்குவியலை (மஹராகக்) கொடுத்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள் அல்குர்ஆன் 4:20 என்ற வசனத்தின் மூலம் ஒரு பொற்குவியலையும் மஹராக வழங்கலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

"நிகாஹ்"

நிகாஹ்-திருமண ஒப்பந்தம்

 
திருமண சபையில் திருமண ஒப்பந்தத்தின் போது சாட்சிகள், மஹர் தொகை, அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் ஜமா அத்துகள் திருமணப் பதிவேடுகளை வைத்திருப்பர். இவ்விதம் பதிவு செய்வதால் பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. பிரச்சனைகள் எழுந்தாலும் இது தீர்க்கவும் பயன்படும். சாட்சிகள் இறந்து விட்டால்கூட பயன் அளிக்கும். அதனால், திருமண ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தில் எந்த ஒப்பந்தமாயினும் கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் அதை நீதி மிக்க இரு சாட்சிகளுடன் எழுதி வைக்க வேண்டும் என 2:282 இறைவசனம் கட்டளையிடுகிறது. (இது திருக்குர்ஆனின் மிக நீண்ட வசனமாகும்)


ஒப்பந்த வாசகம் (செய்யும் முறை)


'இன்ன பொருளை அல்லது பணத்தை மஹராகத் தந்து உங்கள் மகளின் சம்மதத்துடன் நான் திருமணம் செய்து கொள்கிறேன் உங்களுக்கு சமம்மதமா?' என்று மணமகன் கேட்க பெண்ணின் வலி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது 'இன்ன பொருளை அல்லது பணத்தை மஹராக ஏற்று, எனது மகளை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் உங்களுக்கு சம்மதமா? என்று வலி கேட்க மணமகன் ஒப்புக் கொள்ளவேண்டும். அத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்துவிடும்.

இருசாட்சிகள்


திருமணம் செய்தபின் இருசாராரிடையே பிணக்குகள் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் அவசியமாகிறது.
அந்த சாட்சிகள் திருமணத்தின்போது. அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.
சாட்சிகள் ஆண்களாக இருத்தால், இருவரை சாட்சியாக நியமிக்க வேண்டியது அவசியமாகும்.

திருமண உரை


திருமண உரை என்பது கட்டாயம் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. வாய்ப்பும், சுழ்நிலையும் சரியாக அமைந்தால், செய்து கொள்ளலாம்.
அப்துல் முத்தலிபின் மகள் உமாமா அவர்களை குத்பா ஓதாமலேயே நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள் என பனீஸுலைம் வகுப்பைச்சார்ந்த நபித் தோழர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமண உரையின் பொருள்


நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். எங்களின் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் எங்களின் தீயச் செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை வழி கெடுப்போர் எவருமில்லை. மேலும் அல்லாஹ் வழிகேட்டில் வைத்திருப்பவரை நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது அடியாரும் திருத்தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
அல்லாஹ்வை முழுமையாக அஞ்சுங்கள். முஸ்லிம்களாகவே தவிர மரணிக்க வேண்டாம்.

அல்குர்ஆன் 3:102.


எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ, அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். உறவினர்கள் விசயத்திலும் அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்லாஹ்) உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1


அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்.அல்குர்ஆன் 33:70


இது நபி(ஸல்) அவர்கள பொதுவாக உரை நிகழ்த்தும்போது பயன்படுத்தும் வாசகங்களாகும். திருமணத்திலும் பயன்படுத்தி உள்ளனர். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு, திர்மிதி, இப்னு மாஜா போன்ற நூல்களில் இது சம்மந்தமான ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
இன்றைய திருமணத்தில் இந்த உரை, ஒரு சடங்காக, மந்திரமாக நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சடங்கல்ல. உரையின் நோக்கம் வந்திருப்போரிடம் இறைவனைப்பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்துவதாகும். அரபி மொழயில்தான் உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மக்கள் அறியும் மொழியில் உரை நிகழ்த்துவதே சிறந்ததாகும்.

"வலீமா"

வலீமா திருமண விருந்து


திருமணத்தின் போது மணமகன் வழங்கும் விருந்திற்கு வலிமா என்று சொல்லப்படும். இந்த விருந்து ஒரு சுன்னத் ஆகும்.

அப்துர்ரஹ்மான இப்னு அவ்ஃப்(ரலி) என்ற நபித் தோழர் ஒரு அன்சாரிப் பெண்ணை மணம்; முடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், என்ன விசேஷம் என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது என பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், எவ்வளவு மஹர் கொடுத்தீர்? என கேட்டார்கள்.
அதற்கு இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரித்தம் பழம் அளவு தங்கம் என்றார்கள்.
ரசூல்(ஸல்) அவர்கள், 'ஒரு ஆட்டையாவது அறுத்து வலிமா விருந்து வைப்பீராக' என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்)அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி)ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.


வலீமா எப்போது கொடுப்பது?


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும், இரண்டாவது நாள் கொடுப்பது ஸுன்னத் ஆகும், மூன்றாவது நாள் கொடுப்பது பகட்டாகும். எவன் பகட்டு காட்டுகிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் பகிரங்கப்படுத்துகிறான்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூது (ரலி)ஆதாரம்: திர்மிதீ.


இன்று பல பகுதிகளில் வலீமா என்ற சுன்னத்தான விருந்து நடைமுறையில் இல்லை. அதற்குப் பதிலாக வரவேற்பு (ரிசப்ஷன்) என மாற்றார் கலாச்சாரத்தைப் பின்பற்றி நடத்தப்படும் விருந்துகளே வழக்கில் உள்ளன.எனவே வலிமா என்னும் விருந்து முறை (ஸுன்னத்) அனுசரிக்ப்பட்ட வேண்டும்.
ஆனால் மணமகன் கட்டாயமாக விருந்தளிக்க வேண்டும் என்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. தன் வசதிக்கு ஏற்றவாறு சாதரணமாக சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும். ஆடம்பரமாக வலிமா செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

பெருமானாரின் வலீமா வீருந்துகள்


நபி (ஸல்) அவர்கள் ஒரு திருமணத்தின்போது இரு முத்துக்கள் அளவுள்ள கோதுமையையே வலிமாவாக அளித்ததாக ஸபிய்யா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(1 முத்து என்பது 750 கிராம் ஆகும். ஆதாரம்: புகாரி.
நபி (ஸல்) அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது நாயகத்தோழர்கள் வலிமா விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள். விருந்தில் ரொட்டியோ, கறியோ கிடையாது. போர்வையை விரித்து பேரீத்தம்பழம், பாலாடைக்கட்டி நெய்(போன்றவை) பரிமாறப்பட்டன.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:


நீங்கள் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்'
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி)
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

"வாழ்த்தும் துஆ"
 

திருமண வாழ்த்து


நமது சமுதாயத் திருமணங்களில், திருமண துஆ என்ற பெயரால், 'அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா…' என்று ஆதாரமில்லாத ஒரு துஆவை ஒதி வருகிறார்கள். இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்துவதற்கென்றே அழகிய துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.
இந்த துஆவின் பின்னனியைப் புரிந்தால் யாரும் இதனை ஓத முன் வரமாட்டார்கள்.

நபி(ஸல்) மணமக்களை வாழ்த்திய துஆ


பாரகல்லாஹ் ல(க்)க வபார(க்)க அலை(க்)க வஜமஅபைனகுமா ஃபீகைர்

பொருள்:


அல்லாஹ் உனக்கு (பரக்கத்) அருள் புரிவானாக. உன்னிலும் (உன் சந்ததிகளிலும்) அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: அஹ்மத்.


மிகச் சிறிய வார்த்தையானது மிகப்பெரிய பொருளையும் கருத்தாழத் தையும் தாங்கி நிறிகிறது.
மனிதனுக்கு வேண்டிய அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கட் செல்வம் ஆகியவற்றைப் பெற்று சமுதாயத்துக்கும், நாட்டிற்கும் வேண்டிய அறப்பணிகளில் கைகோர்த்து நின்று அருஞ்செயலாற்றி சாதனைகள் பல படைக்க வேண்டுமென வாழ்த்தும் இந்த அரிய வாழ்த்தும் துஆ வும் மணமக்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். உள்ளத்தால் உணர்ந்து வாழ்த்தி துஆ செய்வதை விட்டு விட்டு பொருள் புரியாமல் புரியாத மொழியில் கேட்கும் ஒரு சம்பிரதாயப் பிரார்த்தனைக்கு தலை அசைப்பதும் இஸ்லாம் கற்றுத் தராத அல்லிஃப் பைனஹுமா போன்ற துஆக்களை ஓதுவம் சரியல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
நடைமுறையில் சிறந்தது, என்னுடைய நடைமுறை, காரியங்களில் கெட்டது பித்அத்கள், (இஸ்லாமிய மார்க்கத்தில் நபி வழிக்கு மாற்றமாக அதிகப்படியாக சேர்க்கப்பட்ட புதுமைகள்) பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகளே. வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி). ஆதாரம்: புகாரி.

"வரதட்சணை"

வரதட்சணையும் மலர்மாலையும்

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிடமிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது. வரதட்சணைக் கொடுமை இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் தமிழகத்திலும், கேரளாவிலும் தலைவிரித்தாடுகிறது. வரதட்சணை பேசாத திருமணங்களே இல்லை எனும் அளவுக்கு வரதட்சணைப் பேரம் நடைபெற்று வருகிறது. நாளிதழ், வார, மாத இதழ்களிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் வரதட்சணையின் விளைவுகளைப் பற்றி அன்றாடம் செய்திகள் இடம் பெறாமலில்லை.வரதட்சணைக்கு எதிராக பலர் குரல் கொடுத்தாலும் வரதட்சணை ஒழிந்த பாடில்லை.
இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது. அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது. வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம்.

அல்குர்ஆன் (25:37)


தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.


நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு இம்சைப்படுத்தும் மணமகன் வீட்டார் மறுமையில இழிநிலையை எய்துவர் என மேற்கூறிய மறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும், பாதிக்கப்பட்டோரின் மன வேதனையாலும், பிரார்த்தனையாலும் பல்வேறு சோதனைகளை அடைவர்.
(உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் (ஏக்கப்பெரு மூச்சால் எழும்) பிரார்த்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் அவனது பிரார்த்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி.
மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்ற 4:4 ஆவது இறைக் கட்டளையை மீறிய பாவத்திற்கும் இவர்கள் ஆளாவர். மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்பது அறவே கூடாது ஆயினும் பெண் வீட்டார் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புகளைப் பெறுவதில் தவறில்லை. எனவே இலட்சங்களுக்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்குத் துணை புரிவானாக. ஆமீன்.
இன்றையத் திருமணங்களில் இந்த ஹதீஸில் வரும் எச்சரிக்கையை யாரும் கண்டுகொள்வதே இல்லை.பெண் வீட்டாருக்கென்று தனிப்பட்ட முறையில் எத்தகைய செலவும் இல்லை. திருமண விருந்து உட்பட அனைத்து செலவுகளையும் மணமகனே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மலர் மாலை


திருமணம் என்றாலே மாலை அணிதல் கண்டிப்பான ஒன்றாகி மாலை இல்லாமல் திருமணமே இல்லை என்னுமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. இது மாற்று மத கலாச்சாரமாகும்.
மாலை எடுக்கும்போது அணிவிக்கப்படும் போதும், பெற்றோர், பெரியோர் முன்பு நீட்டப்படும்போதும் தங்களின் கண்களிலே ஒன்றிக் கொள்வர். இதற்காக சில ஊர்களில் ஹஸ்ரத்தை வைத்து பாத்திஹா ஓதப்படுகிறது. சில ஊர்களில் கழுத்தில் என்றில்லாமல் தலை, வயிறு, முதுகு என்று உடல் முழுவதும் பூமாலை சுற்றுவர். இது வாடினாலும் வதங்கினாலும் கருகிப்போனாலும் பாதுகாக்கப்பட்டு மணவறையில் பல்லாண்டுகளாக தொங்க விட்டு இப்பூ மாலையைப் புனிதமாகக் கருதுவோரும் உண்டு.
இந்த பூமாலைக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமே இல்லை. அதற்கு எவ்வித புனிதத்துவமும் கிடையாது.

"கடமைகள்"

கணவனின் கடமைகள்


மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள்,  

"நீர் உண்ணும்போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும்போது அவளையும் அணியச்செய்வதும்,அவளது முகத்தில் அறையாதி ருப்பதும்,  அவளை (தீய சொற்களால்) இழிவு படுத்தாதிருப்பதும், வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளைக் கண்டிக்காதிருப்பதும் (கணவனின் கடமை) என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பாளர்: முஆவியா(ரலி)ஆதாரம்: அபூதாவூத் இப்னுமாஜா, அஹ்மத்.


ஒரு இறை நம்பிக்கையுடைய ஆண், இறை நம்பிக்கையுடைய தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால், அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்பது நபிமொழி.அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

தவறு செய்யும் மனைவியை வீட்டிலன்றி (வெளியிடங்களில் பலரறிய) கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது.அறிவிப்பாளர்: முஆவியத்துல் கஷீரி(ரலி)ஆதாரம்: அபூதாவுத், இப்னுமாஜா.

மனைவியின் கடமைகள்


அல்லாஹ் கூறுகின்றான்.
நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தன் கணவர்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தன் கணவர்) இல்லாத சமயத்தில், அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள் தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன் : (4:34)

ஒரு பெண் (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம் என்று அவளிடம் (மறுமையில்) கூறப்படும்.அறிவிப்பாளர்: அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப்.ஆதாரம்: தப்ரானி அஹ்மத்.


ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சுவர்க்கத்தில் நுழைவாள்.
அறிவிப்பாளர்: உம்முஸலமா (ரலி) ஆதாரம்: திர்மிதி.

மணமக்கள் கேட்கவேண்டிய துஆ


ரப்பனா வஜ்அல்லா முஸ்லிமைனி ல(க்)க வமின் துர்ரியத்தினா உம்மதன் முஸ்லிமதன் ல(க்)க இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம் (2:12)

பொருள்:-
எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக. எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக. எங்களை (கருணையுடன் நோக்கி, எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கிறாய்.


எச்சரிக்கை (தடுக்கப்பட்டவை)


ஒரு கணவன் தன் மனைவியிடம் பின் துவாத்தில் உடல்உறவு கொள்வதையும், மாதவிடாயின் போது உடல்உறவு கொள்வதையும் இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது. இவ்விரண்டும் (ஹராம்) தடை செய்யப்பட்டுள்ளது.
'நபிகள் நாயகம்(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
உங்கள் மனைவியரின் பின் துவாரத்தில் உறவு கொள்ளாதீர்கள்"பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்' அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம்: அஹ்மத்.


கடமையான குளிப்பு


தம்பதியர் உடல் உறவு கொண்டால் பர்ளான குளிப்பு இருவர் மீதும் கடமையாகும்.கடமையான குளிப்பை நிறைவேற்றுவதாக நிய்யத்து வைத்து உடல் முழுவதும் நனையும் வகையில் குளிப்பது இருவரது கட்டாயக் கடமையாகும். ( குளிப்பு பற்றிய மேல்விபரங்களுக்கு பார்க்க:  தொழுகைப்பாடத்தில் தூய்மை)
இதில் அலட்சியம் காட்டுவோர் கடும் தண்டனைக்க ஆளாவர் என்பதை பல்வேறு நபிமொழிகள் எச்சரிக்கின்றன. (மேல் விபரங்களும் ஹதீஸ், ஃபிக்ஹீ நூல்களைக் காண்க.)

உடலுறவின் போது ஓதும் துஆ 

ஒரு கணவன் தம் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் போது 'பிஸ்மில்லாஹ்' கூறுவதும் இறைவனிடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் உடல்உறவு கொள்ளும்போது,
'பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா'
இறைவன் திருநாமத்தால் உடலுறவு கொள்கிறேன். இறiவா! ஷைத்தானின் தீங்குகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! நீ எங்களுக்கு வழங்கும்; சந்ததிகளையும் ஷைத்தானைவிட்டும் பாதுகாப்பாயாக என ஓதுவாராக. இவ்விதப் பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தை தரித்துப் பிறந்தால் அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தானின் தீங்குகள் அணுகாது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்.


பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய பெருநெறியைப் பின்பற்றி இறை மறை ஒளியில் நபி வழியில நின்று சம்பிரதாயச் சடங்குகளுக்கு சாவு மணி அடித்து கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்களை மண்மூடச் செய்து தூய இஸ்லாமிய வாழ்வு வாழ்வோம். அதற்கு வல்ல ரஹ்மான் (தவ்ஃபீக்) நல்லருள் புரிவானாக.
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத் தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபந் நார்.
இறைவா! இம்மையிலும் நல்வாழ்வை நல்குவாயாக! மறுமையிலும் நற்பேறுகளை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாயாக. ஆமீன்.

"பித்அத்கள்"
 

திருமணத்தின் போது கூடாத பித்அத்கள் - அனாச்சாரங்கள்!

இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் ஹராம்களும், கேளிக்கைகளும், அனாச்சாரங்களும் எண்ணிலடங்கா. அவற்றில் சில:-

1. கைக்கூலி  என்னும் பெயரில் வரதட்சணை வாங்குதல்.
2. மணமக்களுக்கு மருதாணி போடுதல், அதற்காக திருமண இரவில் ஒரு விழாவே எடுத்தல், குலவை விடுதல், மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடுதல், விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் ஆண், பெண் (ஹிஜாபு) திரை இன்றி கேலி செய்தல்.
3. கருகமணி கட்டுதல், ஆரத்தி எடுத்தல், மணமகனின் காலை கழுவிவிடல், காலில் ஸ்பிரே அடித்தல், ஆடு, கோழி போன்றவற்றை தலை சுற்றுதல்.
4. ஊர்வலம், கார், குதிரை, யானை போன்றவற்றில் உலா வருதல்.
5. மணமக்களை கல்யாணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள் கட்டி அணைத்து வாழ்த்துதல்.
6. மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் ஷிர்க்காண (இணை வைக்கக்கூடிய) பாடல்களைப் பாடுதல்.
7. மணமக்களை மலர்களால் அலங்கரித்தல், மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
8. நல்லநாள், நல்ல நேரம், சகுனம், நஹசு, ஜோதிடம் பார்த்தல், (இது ஹராமாக்கப்பட்டுள்ளது)
9. முகச்சவரம் என்ற பெயரில் தாடியை வழத்தல்.
10. மணமகனுக்கு தங்க மாலை, தங்க மோதிரம், நகை அணிவித்தல். (இது ஹராம் தடுக்கப்பட்டது)
11. திருமணத்தின் போது ஆடல் பாடல், பாட்டுக் கச்சேரி நடத்துதல், மேள வாத்தியம், மேடை அலங்காரம், வீடியோ ஆகிய அனாச்சாரங்களுக்காக பணத்தை வீண்வி;ரயம் செய்தல்.
12. பெண் வீட்டாரின் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரால் பணத்தையும், பொருட்களையும் கறத்தல்.
13. நிகாஹ் முடிந்த பிறகு 'யாகுத்பா' பைத்து ஓதுதல்.
14. திருமணத்தன்று விருந்து, மண்டபச் செலவுகளுக்காக பெண் வீட்டாரை நிர்பந்திப்பது.
15. மணமக்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் செல்வது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவை அனைத்தும் (பித் அத்கள்) அனாச்சாரங்கள், தவிர்க்கப்பட வேண்டியவைகள், மாற்று மதக்கலாச்சாரங்கள்.

இவைகளை திருமணத்தில் நடைமுறைப்படுத்துவதால் நபி வழிகளிலிருந்து நாம் விலகி வழிகேட்டின் பால்  செலவதாக ஆகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை அனைத்து வழிகேடுகளிலிருந்தும் காப்பானாக!

"இப்படி வாழ்த்தலாமா?"
 
திருமண வாழ்த்து :

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் 'நபிமார்களைப்போல் வாழ்க'என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு "ஆமீன்" கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.

ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரி}h வயூஸுஃப் வ ஸுலைஹா -
இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்தின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?

2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !
( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை.
இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்: 66: 10)

இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.

இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று வாழ்க என வாழ்த்தலாமா ?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !
இப்றாஹீம் நபி – ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை)குழந்தைப்பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார். என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .

வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறுவாழ்த்தலாமா? எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்?
ஆசையோடு எதிர்பர்க்கும் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா ?

4. நபி யூஸுஃப் – ஸுலைஹா போல் வாழ்க !
5. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை..
இந்த ஸுலைஹா யார் ?
6. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?
7. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாகசித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
8. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின் மனைவியாக முடியுமா?
9. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?
10. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை – ஒரு தம்பதியை – குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?
11. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
12. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?
13. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
14. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது
விட்டிருப்பான்?

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளவிரும்புபவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

பாவமென்று தெரிந்தும் வீம்புக்காக இவற்றில் அடம்பிடிப்பதும் பெரும் பாவமல்லவா ? இவையெல்லாம் சரிதானா என்று இன்னும் சிந்தித்துப் பார்க்காமலிருப்பது பத்தாம் பசலித்தனமல்லவா ?

தவறான ஃபத்வாக்கள்.

ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ மர்ர்க்கத்தைப்பற்றி எதையும் துணிந்து எழுதுவது இன்று நாகரீகமாகிவிட்டது. தேசிய அளவில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஷாபானு, இம்ரானா
போன்றவர்களின் செய்திகளை சமுதாயம் நன்கறியும்.

தமிழகத்திலிருந்து நெடுஙகாலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ ஒன்றில் " இஸ்லாமிய சட்ட விளக்கம்" என்ற பெயரில் யூஸுஃப் நபி , ஸுலைஹாவை மணமுடித்திருந்தார்கள் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர், அதை நியாயப்படுத்த இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மக்களால் அறியப்படாத " மஆரிபுல் குர்ஆன்" என்னும் உருது கிதாபை ஆதாரமாககக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு வலுவூட்டும் ஆதாரம் ஏதையேனும் அதில் குறிப்பிட்டுள்ளார்களா என்றால் எதுவுமே இல்லை. குர்ஆன் , ஹதீஸுடைய விளக்கங்களோ அதனை உறுதிப்படுத்தும் சான்றுகளோ குறிப்பிடப் படவில்லை. சில விரிவுரையாளர்கள் இப்படி எழுதியுள்ளார்கள் என மொட்டையாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.

இறுதியில் யூஸுஃப் ஸுலைஹா போல் வாழ்த்தலாம் என பத்வாவும் கொடுத்துள்ளார்கள்.

இதனை வரலாற்று ரீதியாக சற்று ஆராய்ந்தாலே இதற்கு துளியும் ஆதாரம் இல்லை என எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இறை தூதர் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வாழ்ந்த காலமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகும். அவர்கள் ஸுலைஹாவை மணமுடித்தார்கள் என்பதை குர்ஆனோ ஹதீஸோ எதையும்
குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலோ கல் வெட்டோ இல்லை. இமாம்கள் ஏரேனும் இதுபற்றி எழுதியுள்ளார்களா என ஆராய்ந்த போது அப்படியும் இல்லை.இறைவன் ஸூரா யூஸுஃபில் கூறுகிறான் :

நபியே! இந்த குர்ஆனை ( நாம் வஹீ மூலம்) அறிவித்திருப்பதின் வாயிலாக மிக்க அழகான வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் அறியாதவராக இருந்தீர்.
( அல்-குர்ஆன் 12 :13)

அல்லாஹ்வின் தூதரே வஹீ வருவதற்கு முன்னர் இந்தச்செய்தியைப் பற்றி எதுவும் தெரிந்திருக் கவில்லை என்று குர்ஆன் கூறும்போது, மற்றவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். ?

நமக்கு அந்த துஆவில் வரும் நபி மார்களைப்பற்றித் தான் தெரியுமே தவிர அவர்களின் மனைவியருடன் நடத்திய இல்லறவாழ்வைப்பற்றி எதுவும் தெரியாது. அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இவர்களின் இல்லற வாழ்வு பற்றி எதுவும் அறிவிக்காத போது நாம் எவ்வாறு துணிந்து இது பற்றிக் கூறுவது ? இவையெல்லாம் புனித நபிமார்களைப் பற்றிப் புனையப்படும் கற்பனைகளல்லவா ? பொய்களல்லவா?பாவங்களல்லவா?

ஓவ்வொரு நபிமார்களின் வாழ்வில் பின்பற்றப்படவேண்டிய எத்தனையோ அம்சங்களும், பாடங்களும் உள்ளன.  அவற்றை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டுமே தவிர குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்படாத எதையும் நாமாக் கற்பனை செய்து, ஆதாரமற்ற செய்திகளை வைத்து மர்க்கமாக்குவதும் முன்மாதிரியாகக் கொள்வதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவே இல்லை.

எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்த்தியவாறே நாமும் வாழ்த்தவேண்டும்.
"திருமண வாழ்த்து" என்ற பெயரில் இவர்கள் வாழ்த்துவது நபி வழிக்கு மாற்றமான துஆ வாகும்

பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிய பெருநெறியைப் பின்பற்றி இறை மறை ஒளியில் நபி வழியில நின்று சம்பிரதாயச் சடங்குகளுக்கு சாவு மணி அடித்து கண்மூடித்தனமாக பழக்க வழக்கங்களை மண்மூடச் செய்து தூய இஸ்லாமிய வாழ்வு வாழ்வோம். அதற்கு வல்ல ரஹ்மான் (தவ்ஃபீக்) நல்லருள் புரிவானாக.
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத் தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனதன் வகினா அதாபந் நார்.
இறைவா! இம்மையிலும் நல்வாழ்வை நல்குவாயாக! மறுமையிலும் நற்பேறுகளை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாயாக. ஆமீன்.

Courtesy:  

Thanks and regards

 


Mohamed Subuhan Sultan

Instrument Engineer - Maintenance

Al-Jubail Fertilizer Company (Al Bayroni)

A SABIC Affiliate, P.O. Box 31961

Jubail Industrial City 31961, Kingdom of Saudi Arabia

M + 966 5 4462 5733, T +966 [3] 340-6492 (From 7.30 am till 4 pm)

F +966 [3] 340 6121

E sultanms@ALBAYRONI.SABIC.COM, mohdsubuhan@gmail.com

Skype Id: mohdsubuhan, URL: www.mohdsubuhan.blogspot.com

"Rabbi zidnee 'ilmaa"
My Lord! increase me in knowledge. (The Holy Quran-20:114)

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

0 Responses

கருத்துரையிடுக