மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்!



---------- Forwarded message ----------
From: Sulthan sea port <seaportdawa@gmail.com>
Date: 2012/10/30
Subject: [K-Tic] மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்!
To: குவைத் <k-tic-group@yahoogroups.com>, குவைத் <ktic.kuwait@gmail.com>, குவைத் <K-Tic-group-owner@yahoogroups.com>, TMB <tamilmuslimbrothers@googlegroups.com>, TMB <tamilmuslimbrothers@gmail.com>, தபஃர்ரஜி ஜித்தா <TAFAREG-jeddah@yahoogroups.com>, தபஃர்ரஜி ஜித்தா <tafaregjeddah@gmail.com>


 

 மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்!

சர்ச்சைக்குரிய மதுரை ஆதீனத்து மடாதிபதி அருணகிரிநாதரை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது அதிமுக அரசு. இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959ன் பிரிவு 59ன் படி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பலத்த சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் ஆளான நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்து அறிவித்து விட்டார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரை நீக்கிவிட்டு மதுரை ஆதீனத்து நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ளவேண்டி தொடுக்கப்பட்ட வழக்கைக் கண்டு அஞ்சிய மடாதிபதி அருணகிரிநாதர் அதிரடியாக நித்யானந்தாவை நீக்கிவிட்டார்.

nityananda_arunagirinathar_350

நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை. இது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது. 1500 ஆண்டுகால பழமை வாய்ந்தது, தமிழ் வளர்த்த சம்பந்தரால் அமைக்கப் பெற்றது என்றெல்லாம் போற்றப்படும் மதுரை ஆதீனத்துப் புனிதம் பறிபோய்விட்டது என்று பதறியவர்கள் கருத்துக் கூறியிருக்க வேண்டும். ஏனோ கருத்து சொல்லவில்லை.

அரசு தொடுத்துள்ள வழக்கு குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கும், அரசு தனது வழக்கைத் தொடர்ந்து நடத்துமா என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் மடங்கள், கோயில்கள் பற்றிய கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.

தமிழ்நாட்டில் 38,491 கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சிறப்பு அறக்கட்டளைகள் உள்ளன என்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு கூறுகிறது. பார்ப்பனியத்தை எதிர்த்து பகுத்தறிவுக்காகப் போராடிய தமிழ்நாட்டில் இத்தனை கோயில், மடங்களா? என்ற ஆச்சரியம் எழலாம். இதை விட ஆச்சரியம் பிற மாநிலங்களில் கோவில், மடங்களுக்கு இவ்வளவு நிலங்கள், சொத்துக்கள் இல்ல என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில், சைவ, வைணவ மடங்கள் மட்டும் 56. இவற்றின் கீழ் 57 கோயில்கள் உள்ளனவாம். கோயில்களுக்கு 4,22,930 ஏக்கர் நிலங்களும் மடங்களுக்கு 55,825 ஏக்கர் நிலங்களும் மொத்தம் 4,78,755 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு கூறுகிறது. ஆனால் நாற்பதுகள், அறுபதுகளில் நிலம் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் ஆறு லட்சம் ஏக்கர்களுக்கு மேல் நிலம் இருந்ததாக கூறுகின்றனர். இது தவிர கட்டிடங்கள், காலி இடங்கள், வீட்டுமனைகள் ஏராளமாக உள்ளன. ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ3 லட்சம் மதிப்பு என்று வைத்துக்கொண்டால் கூட அரசாங்கம் கூறும் இந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ12,687 கோடி. ஏக்கர் கோடி பெறுகிற நிலமும் இருக்கிறது. இது போக ஏராளமான கட்டிடங்கள் காலி மனைகள் உள்ளன. அவற்றின் மதிப்பை அரசாங்கம் மதிப்பிட்டதாகத் தெரியவில்லை. மதிப்பிட்டிருந்தாலும் வெளியில் சொல்வதில்லை. பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள சென்னை போட் கிளப் இருக்கும் இடம் கூட கோவிலுக்கு சொந்தமானது.

மடங்களில் மிகவும் பணக்கார மடம் தருமபுரம். திருப்பனந்தாள் காசிமடம் (இதற்கு வாரணாசியிலும் நிலங்கள், கட்டிடங்கள் உள்ளனவாம்), திருவாவடுதுறை மடங்கள் அடுத்த பணக்கார மடங்கள். சங்கர மடத்தின் கதை தனி. திருப்பனந்தாள் மடத்துக்கு 6000 வேலி (ஒரு வேலி என்பது 6.5 ஏக்கர்) நிலங்கள் உள்ளதாக வாய்மொழி வழக்கு கூறுகிறது. அதாவது 39000 ஏக்கர் விவசாய நிலங்கள். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மட்டும் 12 ஊராட்சிகள் (30)திருப்பனந்தாள் மடத்து நிலத்தில் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தனிப்பட்டா கிடையாது. அதாவது யாருக்கும் சொந்த நிலமோ, வீட்டுமனையோ கிடையாது. எல்லாம் குத்தகை. எந்த நேரத்திலும் வெளியேறு என்று சொன்னால் வெளியேறியாக வேண்டும். இந்த ஒன்றியத்திலுள்ள திருலோகி கிராமத்தில் பள்ளிக்கூடம், பால்வாடி, ரேஷன் கடை இன்னும் பல அரசாங்க கட்டிடங்களே மடத்துக்கு சொந்தமான நிலத்தில்தான் உள்ளன. இந்த கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் மடத்துக்குச் சொந்தமானது என்று வளைத்துக் கொண்டார்கள். அரசாங்கத்தால் ஏதும் செய்ய முடியவில்லை! இங்கு மடத்து அதிகாரத்துக்கு கீழ்பட்டதுதான் அரசாங்க நிர்வாகம். அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் மடத்தின் தயவில்தான் வாழவேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் மடத்து நிலங்களில் தலைமுறை தலைமுறையாக உழைத்து மடத்தின் செல்வத்தை பெருக்கி வருகின்றனர். இவர்கள் தங்களுக்காக உழைப்பதில்லை; மடத்துக்காகவே உழைக்கிறார்கள். மடத்து நிர்வாகத்தின் கீழ் படும் துன்பம் சொல்லி மாளாது. குத்தகை விவசாயிகளுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது. மடத்துக்கு குத்தகை அளக்கவில்லை என்று கூறி பல தலைமுறைகள் மடத்துக்கு கடனாளியாகவே வாழ்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் எவருக்கும் சொந்த வீட்டு மனை கிடையாது. நூறு தலைமுறைகளுக்கு முன் பண்ணைகளுக்கு ஒதுக்கிய துண்டு நிலங்களில்தான் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மடங்கள் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவமனை, கருணை இல்லங்கள் என நடத்துகின்றன. இவற்றின் எண்ணிக்கை 95. அனல்வாதம், புனல்வாதம் நடத்தி சமணர்களைக் கொன்று தமிழ் 'வளர்த்த' சைவக்குரவர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் தோற்றுவித்த இந்த மடங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்சி, மெட்ரிக், ஆங்கில நர்சரிப் பள்ளிகளும் உள்ளன! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை ஆதீனத்துக்கு 1250 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மடத்துக்கு சுமார் 1500 கோடி சொத்து உள்ளது. இந்த கணக்குகள் எல்லாம் உத்தேசமானவை. உண்மை சொத்துகள் பலமடங்கு இருக்கும்.

முதலமைச்சருக்கு மிகவும் பிடித்தது சிறீரங்கம் கோயில் மட்டும் 156 ஏக்கர் பரப்பில் உள்ளது. கோவில் சுற்றுச்சுவரின் நீளம் 11 கி மீ. மொத்தம் 600 ஏக்கர்களைக் கொண்ட கோயிலைச் சுற்றி 320 ஏக்கரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏராளமான கடைகள் உள்ளன. வைணவ அகோபில மடத்தின் பராமரிப்பில் உள்ளது இந்தக் கோயில். 320 ஏக்கரில் உள்ள மக்களை வெளியேறச் சொல்கிறது இந்து சமய அறநிலையத்துறை. முடியாது என்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். 1963ல் கொண்டு வரப்பட்ட இனாம் ஆதீனஒழிப்புச்சட்டம் 1963ன் படி எங்களுக்குச் சொந்தம் என்று வாதிடுகிறார்கள் குடியிருப்போர். இல்லை என்று எதிர்வழக்காடுகிறது இந்து அறநிலையத்துறை. ஏன் வெளியேறச் சொல்கிறார்கள்?

திருச்சி மாநகராட்சியிலேயே மிகவும் வளர்ந்து வருகிற இடம் சிறீரங்கம். ரியல் எஸ்டேட் கொடிகட்டி பறக்கிற இடம். அடுக்கு மாடி குடியிருப்புகள் பல வந்து கொண்டிருக்கின்றன. இங்கு 3 படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் விலை 50 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய். (1460 .). ஒரு ஏக்கரில் 30 வீடுகள் கட்டலாம். 320 ஏக்கரில் மூன்றடுக்கு மாடிகள் என்றால் 38400 வீடுகள். மொத்தம் ரூ19,500 கோடி வியாபாரம் நடக்கும்! முதல்வரின் சிறப்பு கவனிப்பிலிருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றி அசிங்கமான வீடுகளையும் அழுக்கான கடைகளையும் அப்புறப்படுத்திவிட்டால் அழகான அடுக்குமாடிகள் வரும், ஒய்யாரமான வணிக வளாகங்கள் வரும். இதற்காகத்தான் வெளியேறச் சொல்கிறார்கள். அனந்தசயனத்தில் ஆழ்ந்திருக்கும் சிறீரங்கநாதர் எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக் கொண்டு தானிருக்கிறார்.

மடங்களின் அதிபதிகள், தனி சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்க சிம்மாசனம், வைரம் பதித்த கிரீடங்கள், வெள்ளி செங்கோல் என வாழ்கிறார்கள். எல்லாம் துறந்ததாகச் சொல்லப்படும் இவர்கள் எதையும் துறக்கவில்லை. தங்கம், வைரம், வெள்ளி, பள்ளிகள், கல்லூரிகள், (இந்த பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது அரசாங்கம், ஓர் ஆசிரியர் பதவிக்கு லஞ்சம் ரூ.8 லட்சம் வரை!)கட்டிடங்கள், விலை உயர்ந்த ஆடம்பரக் கார்கள், வங்கிக் கணக்குகள் (திருப்பனந்தாள் மடத்திற்கென்றே ஸ்டேட் வங்கிக் கிளை திறக்கப்பட்டிருக்கிறது). பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள், ரியல் எஸ்டேட் வணிகம், பினாமியில் பங்கு சந்தை வியாபாரம் எனஇணைப்பொருளாதாரத்தை டத்திக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையைப் பார்த்து அமைச்சர்களும் பெரும் முதலாளிகளுமே கூட பொறாமைப்பட்டுப் போவார்கள்!

Jayendra_Saraswathi_350

'இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு' என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலை மேற்கோள்காட்டித் துவங்கும் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு, 'கலை, கலாச்சாரம், நாகரிகம் வளர்க்கும் பணியில் கோவில்கள், மடங்கள்' முக்கிய பங்காற்றி வருவதாகக் கூறுகிறது. காஞ்சி மடத்து சங்கராச்சாரியார் மீது சங்கரராமனை கொன்ற வழக்கு இன்னும் நடந்து வருகிறது. தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை, திருவாவடுதுறை பெரிய ஆதீனத்தை இளைய ஆதீனம் கொல்ல முயற்சி இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் எண்ணிலடங்கா கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், பதுக்கல்கள், கையாடல்கள் என எல்லாவித சமூகக் குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், சீரழிவுகள் மலிந்தவை. மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழ்நாட்டிலுள்ள மடாதிபதிகளும் தமிழ் ஆர்வலர்களும் பல பேராசிரியர்களும் முற்போக்கு அறிவாளிகளும் கொதித்துப் போயினர். 1500 ஆண்டுகால சைவ மரபும் பெருமையும் ஆகம விதிகளும் களங்கப்பட்டுவிட்டதாக கலங்கிப் போயினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட கவலைப்பட்டுப் போனது. மடாதிபதிகள், 'இழிவுகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் வளர்க்கும் 'கலை, கலாச்சாரம், நாகரிகம்' நிலப்பிரபுத்துவ கலை, கலாச்சாரம், நாகரிகம்! மன்னர்கள் ஒழிக்கப்பட்ட நாட்டில் இன்னும் மன்னர்கள் போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

சொத்து குவிந்திருக்கும் இடத்தில் அதிகாரம் இருக்கும். அதிகாரம் இருக்கும் இடத்தில் அதிகாரச் சண்டை நடக்கும். அதிகாரச் சண்டை நடக்கும் இடத்தில் கொலை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களும் நடக்கும். மடங்களின் புனிதம் குற்றங்களால் மட்டுமே பாதுகாக்கப்படும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் சமணர்களைக் கொன்று உருவான மடங்களின் குற்றம், 1500 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பண்ணை அடிமைகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறபாட்டாளிகளை அடக்கி ஒடுக்கி அபகரிக்கும் குற்றம் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

மடங்கள், கோவில்களுக்கு நிலங்களும் சொத்துக்களும் இல்லாமல் போனால் அதிகாரம் இல்லாமல் போகும். அதிகாரம் இல்லாமல் போனால் அனைத்து சமூகக் குற்றங்களும் இல்லாமல் போகும்.

நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்து மிட்டா, மிராசுகள் முதுகெலும்பை ஒடித்த கட்சி திமுக என்று அண்ணாவும் கருணாநிதியும் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் நிலச் சீர்திருத்தத்திலிருந்து மடங்களுக்கும் கோவில்களுக்கும் விதிவிலக்களித்த குற்றத்தைச் செய்தார்கள். அதனால்தான் மடங்களின் குற்றமும் சீரழிவும் இன்றளவும் தொடர்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராகப் போர் புரிந்தவர்கள் என்று சொல்லும் திராவிடக் கட்சிகள் கோவில், மட நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. அதுமட்டுமல்ல திமுக, அதிமுக பெருந்தலைவர்கள் மடாதிபதிகளோடு கூட்டு சேர்ந்து நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாக்கிறார்கள். கூட்டுக் கொள்ளையடித்து ஆதாயமடைகிறார்கள்.

திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசாங்கம் மதுரை ஆதீனம் மீது தொடுத்துள்ள வழக்கை பின்வாங்காமல் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மடங்கள் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் விசாரிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். மடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள். அவர்களது குற்றங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மடங்கள், கோவில்களின் நிலங்கள், சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நிலங்களை குடியிருக்கும் ஏழைகளுக்கும் பயிரிட்டுக் கொண்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் சொந்தமாக்கிட வேண்டும். தலைமுறை தலைமுறையாக உழைத்துக் கொடுத்த உழைப்பாளிகளின் வாரிசுகளுக்கும் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சேர்ந்தாக வேண்டும். 21 நூற்றாண்டில், மடங்கள், கோவில்கள் பேரால் நிலப்பிரபுத்துவ பொருளாதாரம், அரசியல், 'கலை, கலாச்சாரம், நாகரிகம்' நீடித்திருப்பதற்கு எந்த சமூக, அரசியல் நியாயமும் இல்லை.

-‍ பாலசுந்தரம், மாநிலச் செயலாளர், CPI ML ( bala_cpiml@yahoo.com)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21782


--
_______________
Thanks & Regards,

S.A.SULTHAN


__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___



--